ஏற்றப்பாட்டு - பிள்ளையாரே வாரும்

                                                    ஏற்றப்பாட்டு


நாட்டுப் புறப் பாடல் வகைகளுள் ஏற்றப்பாட்டு தனிச் சிறப்பு

வாய்ந்தது. வேளாண் தொழிலில் விதை விதைத்து நீர் பாய்ச்சி

களையெடுத்து கதிர் அறுத்து போரடித்து வண்டியில் ஏற்றிச் சொல்லும் வரை

பல வளர்ச்சிப் படிகள் உள்ளன. பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால்

பாசனம் இல்லாத இடங்களில் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின்

மூலமாகவே அதிகாலையில் இறைத்து நீர்ப் பாய்ச்சினர். இவ்வாறு ஏற்றம்

இறைக்கும் போது பாடப்படும் பாடல் ஏற்றப்பாட்டு என்றழைககப்படும்.

ஏற்றத்தின் கீழே சாலைப் பிடித்துக் கவிழ்ப்பவர் பாடலின் ஒவ்வொரு

அடியையும் பாடுவார். ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்போர் ஒன்றாகச்

செர்ந்து அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில் இருப்போர் பாடி

முடித்தபின் அடுத்த அடியைச் சால் பிடிப்பவர் பாட வேண்டும். இவ்வாறு

ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து இப்பாடல் காணப்படும். இதனாலேயே

ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை என்பர்.


                            பிள்ளையாரே வாரும் பெருமாளே வாரும்


பிள்ளையாரே வாரும் பெருமாளே வாரும்

சிவனாரே வாரும் வேலவரே வாரும்

சிவனும் பெருமாளும் சேர்ந்து ரதமேற

அரியும் சிவனும் அமர்ந்து மலலேற

குருவும் பெருமாளும் கூடி ரதமேற

பொற்கொடையும் தேரும் போக வர வேணும்

*அறுவதியா லொண்ணு

அறுவதியா ரெண்டு

அறுவதயா மூணு

அறுவதியா நாலு

அறுவதியா லஞ்சி

அறுவதியா லாறு

அறுவதியா லேழு

அறுவதியா லெட்டு

ஆரணி நடுவ

தாம்பர நடுவ

வேலூரு நடுவ வெத்தல கிடங்கு

வெள்ள வெத்தலயோ

வேலங் களிப்பாக்கே

சுண்ணாம்பு கடையும்

சோனகத் தெருவும்

போனவன் திரும்ப

போட்டாளே மருந்த

போட்டாளே மருந்த

பொடி மருந்து கள்ளி

கள்ளி மருந்தாலே

கருத்த மறந்தேனே

தாசி மருந்தாலே தாய மறந்தேனே

வேசி மருந்தாலே

வீட்டை மறந்தேனே

பாயி மருந்தாலே பாசத்த மறந்தேனே

அண்ணன் தம்பி எல்லாம்

அடுத்தப் பகையானேன்

கூட்டாளி மார்க் கெல்லாம்

கொல்லும் பகையானேன்

மாமன் மைத்துனர்க் கெல்லாம்

மனது பகை யானேன்

சுற்றத் தார்க் கெல்லாம்

உற்ற பகை யானேன்

தாசிகளைக் கண்டா தல மறஞ்சி வாடா

வேசிகளைக் கண்டா வழி விலகி வாடா

ஏழு மல வாசா எளய பெருமாளே

எழுதும் மணவாளா

எங்கள நீ காரும்

எழுபதியா லொண்ணு

எழுபதியா ரெண்டு

எழுபதியா மூணு

எழுபதியா நாலு

எழுபதியா லஞ்சி

எழுபதியா லாறு

எழுபதியா லேழு

எழுபதியா லெட்டு

எட நாட்டு இடையா

கடா ஓட்டி வாடா

மல நாட்டு இடையா

மந்த ஓட்டி வாடா

எட நாடு தூரம் கடா வராதய்யா

மல நாடு தூரம் மந்த வராதய்யா

குட்டியாடு ரொம்ப

கூட வரா தய்யா

குட்டியாடு சொம்ப

கூட வரா தய்யா

மொட்ட ஆடு ரொம்ப

மோடு ஏறா தய்யா

மாசி மல கந்தா

மயிலேறும் முருகா

மலப் பழனி வேலா

மங்க மணவாளா

வளரும் பிள்ளையாரே

காரும் பகவானே

ஏத்த முகம் பாரும் எங்கள நீ காரும்

பிள்ளையாரைப் பாடி

பிடித்தன் கையில் கோல

ஆனை முகனைப் பாடி

அனைத்தும் இறைச்சனே

விநாயகனைப் பாடி

விட்டுவிடப் போறந்

கணபதியைப் பாடி கரை ஏறப் போறன்

ஒண்ணே ரகு ராமா

ரெண்டே ரகு ராமா

மூணே ரகு ராமா

நாலே ரகு ராமா

அஞ்சே ரகு ராமா


ஒரு பதியால் ஒண்ணு, இருபதியால் ஒண்ணு எனக் கணக்கிடும் முறையில்

நூறு சால் வரை இறைக்கும் நீரின் அளவு ஒரு பரியம் என்பர். ஆயிர்ம் சால்

இறைக்கும் நீரின் அளவு பத்துப் பரியம் என்று கணக்கிடப்படும். 500

சால்கள் நீர் இறைத்தால் ஒரு குழி (60 சென்ட் ) நீர் வளம் பெறும் என்பது

மூத்தோர் கணக்காகும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்