அப்துல் ரகுமான்- புத்தகம் - பித்தன்

 

                 புத்தகம்

 

பெயர் அப்துல் ரகுமான்

பெற்றோர் சையத் அஹமத், ஜைனத் பேகம்

பிறப்பு 22.11.1937

இறப்பு 02.06.2017

வானம்பாடி இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். அவர் பால்வீதி

என்று கவிதை தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக

இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்தபோது கவிதையை

நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள்

ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவ்ர பட்டம்

பெற்றவர். 1960க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக்

கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால்

கேட்போரைக் கவர்கவது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக்

கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட

இளந்தலைமுறை கவிஞர்களுகு ஆசானாக விளங்கினார். ஆலாபனை

கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை

பணியாற்றி வந்தார். பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை (சாகித்ய

அகாடமி), சுட்டுவிரல், அவளுக்கு நிலா என்று பெயர், சோதிமிகு

நவகவிதை, ரகசியப்பூ(புதுக்கவிதைகள்) ஆகிய கவிதை தொகுப்புகளை

இயற்றியுள்ளார். அத்துடன் நெருப்பை அணைக்கும் நெருப்பு,

இல்லையிலும இருக்கிறான், இது சிறகுகளின் நேரம், முட்டை வாசிகள்,

ஆறாவது விரல், காக்கைச் சோறு, தட்டாதே திறந்திருக்கிறது ஆகிய

கட்டுரைகள் சேர்ந்த கட்டுரைத் தொகுப்புகளையும்,

குணங்குடியார் பாடற்கோவை ஆகிய நூல்களைப் படைத்துள்ளார்.

இவரது ஆலாபனை என்ற கவிதை தொகுப்பு 1999 ஆம் ஆண்டு சாகித்ய

அகாதெமி விருதினைப் பெற்றது.

 

                    புத்தகம்

பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில்

ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த

புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்

குழந்தைகளைக் கிழித்துவிடாதிர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக

இருக்கிறார்கள்

அவர்கள் கையில் ஏன் காகிதக்

குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை

ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!

நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ இரவு பகல் என்ற ஏடுகள்

உங்களுக்காகவே புரளுகின்றன

நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர்மெய்

எழுத்துகள்

உங்கள் முன் நடமாடுகின்றன

நீங்களோ அவற்றைக் கற்றுக்

கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப்புத்தகமாக இருப்பதை

நீங்கள் அறிவதில்லை

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க

கற்றிருந்தால்

உச்சரிக்க முடியாத எழத்துகளில்

அதிகமான அர்த்தம் இருப்பதை

அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை ‘

வாசிக்க முடிந்திருந்தால் ஒளியின் ரகசியத்தை

அறிந்திருப்பீர்கள்

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்

படிக்கத் தெரிந்திருந்தால்

 

நீங்கள் மனிதனின் சாரத்தை

அறிந்திருப்பீர்கள்.

எழுத்துகளால் அல்ல

காயங்களால் கற்பதே கல்வி

என்பதை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் புத்தகங்கள்

விளக்குகளாக இருக்கின்றன

சூரியனைக் காண விளக்குகள்

தேவைப்படுவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்