வைரமுத்து - விதைச் சோளம்

 

                 வைரமுத்து  - விதைச் சோளம்

பெயர்  வைரமுத்து

பெற்றோர்    ராமசாமித்தேவர், அங்கம்மாள்

பிறப்பு  13.7.1953

மனைவி பொன்மணி

உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று

வெள்ளிப் பதக்கம் பெற்ற இவர்சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்

தமிழ் இலக்கியம் பயின்றார்.1980 இல் நிழல்கள் திரைப்படத்தில் தனது

முதல் பாடலை இயற்றினார். 

வைகறை மேகங்கள் என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அவரது

இந்தப் படைப்பு சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியின்

பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக வைக்கப்பட்டது.

வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், வானம் தொட்டுவிடும் போன்ற

நாவல்களையும், சிகரங்களை நோக்கி, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் உள்ளிட்ட கவிதைத்

தொகுப்புகளையும் இயற்றியுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்காக ஆறு முறை தேசிய விருதும்(1982,1995,1996,

2000, 2006, 2008) , 1986 இல்கலைமாமணி விருதும். 2003 ஆம் ஆண்டு

பத்மஸ்ரீ விருதும் பெற்ற கவிஞர் இவர். கவிப்பேரரசு , காப்பியப் பேரறிஞர்

மற்றும் காப்பிய ராம்ராட் போன்ற பட்டங்களையும் பெற்ற

சிறப்பிற்குரியவர்.

                        விதைச் சோளம்

                      ஆடி முடிஞ்சிரிச்சு

                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு

                      சொக்கிகொளம்  கோடாங்கி

                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

 

                     காடு காஞ்சிரிச்சு

                      கத்தாழை கருகிடிச்சி

                      எலந்த முள்ளெல்லாம்

                      எலையோட உதிஞ்சிருச்சு

.

                      வெக்க பொறுக்காம

                      றெக்க  வெந்த குருவியெல்லாம்

                      வெண்காடு விட்டு

                      வெகுதூரம் போயிடிச்சி.

 

                      பொட்டு மழை பெய்யலையே

                      புழுதி அடங்கலையே

                      உச்சி நனையலையே

                      உள்காடு உழுகலையே

 

                      வெதப்புக்கு  விதியிருக்கோ

                      வெறகாக விதி இருக்கோ

                      கட்டி வெச்ச வெங்கலப்ப

                      கண்ணீர்  வடிச்சிருச்சு

 

                      காத்துல ஈரமில்ல

                      கள்ளியில பாலுமில்ல

                      எறும்பு குளிச்சேற

                      இரு சொட்டுத் தண்ணியில்ல

 

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு

                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு

                      நீட்டிப் படுக்கையிலே

                      நெத்தியில  ஒத்த மழை

 

                      துட்டுள்ள ஆள  தேடி

                      சொந்தமெல்லாம் வாரதுபோல்

                      சீமைக்குப் போயிருந்த

                      மேகமெல்லாம் திரும்புதையா!

 

                      வாருமையா வாருமையா

                      வருண பகவானே!

                      தீருமையா   தீருமையா

                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

 

                      ஒத்த ஏறு  நான் உழுக

                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்

                      இன்னும் ஒரு மாட்டுக்கு

                      எவனப் போய் நான் கேட்பேன்.

 

                      ஊரெல்லாம் தேடி

                      ஏர்மாடு  இல்லாட்டி

                      இருக்கவே இருக்கா என்

                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

 

                      காசு பெருத்தவளே

                      கார வீட்டுக் கருப்பாயி

                      தண்ணிவிட்டு எண்ணயின்னு

                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

 

                      சலவைக்குப் போட்டா

                      சாயம் குலையுமின்னு

                      சீல தொவைக்காத

                      சிக்கனத்து மாதரசி

 

                      கால்மூட்ட வெதச் சோளம்

                      கடனாகத் தந்தவளே

                      கால் மூட்ட கடனுக்கு

                      முழு மூட்ட அளக்கறண்டி

 

                      ஊத்துதடி ஊத்துதடி

                      ஊசிமழை ஊத்துதடி

                      சாத்துதடி சாத்துதடி

                      சடசட சடையா சாத்துதடி

 

                      முந்தா நாள் வந்த மழை

                      மூச்சு முட்டப் பெய்யுதடி

                      தெச ஏதும் தெரியாம

                      தெர  போட்டுக் கொட்டுதடி

 

                      கூர  ஒழுகுதடி

                      குச்சிவீடு நனையுதடி

                      ஈரம் பரவுதடி

                      ஈரக் கொலை நடுங்குதடி

 

                      வெள்ளம் சுத்தி நின்னு

                      வீட்ட இழுக்குதடி

                      ஆஸ்தியில சரிபாதி

                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி

 

                      குடிகெடுத்த காத்து வந்து

                      கூர  பிரிக்குதடி

                      மழைத் தண்ணி ஊறி

                      மண்சுவரு சரியுதடி.

 

                      நாடு நடுங்குதையா

                      நல்லமழை போதுமையா

                      வெத வெதக்க  வேணும்

                      வெயில் கொண்டு வாருமையா.

 

                      மழையும் வெறிக்க

                      மசமசன்னு வெயிலடிக்க

                      மூலையில வச்சிருந்த

                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

 

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே

                      வெட்டியா பூத்திருச்சே

                      மொளைக்காத படிக்கு

                      மொளைகட்டிப் போயிடிச்சே

 

                      ஏர் புடிக்கும் சாதிக்கு

                      இதேதான் தலையெழுத்தா?

                      விதிமுடிஞ்ச ஆளுக்கே

                      வெவசாயம் எழுதிருக்கா?

 

                      காஞ்சு கெடக்குதேன்னு

                      கடவுளுக்கு மனு செஞ்சா

                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே

                      பெருமாளே என்ன  பண்ண?

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்