சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! - ஈரோடு தமிழன்பன்
கனவின் சில
பக்கங்கள் (தொகுப்பு நூல்)
ஈரோடு தமிழன்பன்
பெயர் செகதீசன்
பெற்றோர் செ.இரா.நடராசன், வள்ளியம்மாள்
பிறப்பு 28.9.1940
இவர் ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக்
கவிஞர், புதுக்கவிதைக்
கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதுக்கவிஞர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப்
படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட
இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.
சென்னைத்
தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின்
இயல் இசைந நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு
உறுப்பினராகவும் தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும்
பணியாற்றி உள்ளார்.
வணக்கம் வள்ளுவ
என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருதை 2004 ஆம் ஆண்டில் பெற்றார். தமிழக அரசின் கலைமாமணி
விருதையும் இவர் பெற்றுள்ளார்.
நெஞ்சின் நிழல்
என்ற புதினத்தையும். தீவுகள் கரையேறுகின்றன, தோணிகள் வருகின்றன, அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம், காலத்திற்கு ஒரு
நாள் முந்தி உள்ளிட்ட பல்வேறு கவிதை தொகுப்புகளையும் என்னைக் கவர்ந்த
பெருமானார்(ஸல்) என்ற சொற்பொழிவு நூலையும் பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் என்
கட்டுரைத் தொகுப்பையும், மதிப்பீடுகள் என்ற திறனாய்வு நூலையும் வெளியிட்டுள்ளார்.
ஹைக்கூ மற்றும்
லிமரிக் என்ற இருவகைக் கவிதை வடிவங்களையும் இணைத்து லிமரைக்கூ என்ற வடிவத்தை டெட்
பாக்கர் என்னும் கவிஞர் உருவாக்கினார். இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து 138 பாக்களைத்
தொகுத்து சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள் என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன்
வெளியிட்டிருக்கின்றார்.
சொல்லில் உயர்வு
தமிழ்ச்சொல்லே!
சொல்லில் உயர்வு
தமிழ்ச் சொல்லே
என்று பாடிய பாரதி
இங்கு வரவில்லை
திருவள்ளுவர்க்குக்
கூட
என்வணக்கம் இல்லை
திருக்குறளைப்
படிப்பவர்க்கெல்லாம்
என்வணக்கம்.
வள்ளுவர்க்கு
இதைவிட
வேறென் வணக்கம்
வேண்டும்?
தாயை
யாராலும்
மாற்றிக்கொள்ள முடியாது
எவருக்கு
விண்ணப்பம்
போட்டும்…
கையூட்டு –
காலூட்டுக் கொடுத்தும்
விரும்பியபடி
தாயைப்
பெறமுடியாது.
முடியும் என்றால்
அரசாங்கம்
“தாய்மாற்று” வாரியம்
ஏற்படுத்தியிருக்கும்.
. .
ஏழைகளுக்கு
இலவசத்தாய்
வழங்கு திட்டம்
தொடங்கப்பட்டிருக்கும்.
. .
தேர்தல் முடியும்
வரை
யாரும் தாயாகக்
கூடாது என்று
தலைமைத் தேர்தல்
ஆணையம்
தடையைப்
போட்டிருக்கும்
தாயை மாற்றிக் கொள்ள
முடியாது . . .
தாய் மொழியையும்
மாற்றிக் கொள்ளவோ
தானாகத்
தேர்ந்தெடுத்துக்
கொள்ளவோ முடியாது . . .
தமிழ்நாட்டில்தான்
தள்ளுபடி
விலையில், தமிழ்த்தாயை
விற்றுவிட்டு
ஆங்கில ஆயாவையே
தாயின் இடத்தில்
அமர்த்தினார்கள்.
உடனே
‘மம்மி’ வந்து சேர்ந்தாள்
மம்மி என்றால்
என்ன பொருள்
பதப்படுத்தப்பட்ட
பணம்
மம்மிக்குப்பின்
டம்மியான தந்தை
டாடியானான்
மம்மியையும்
‘மம்’ என்று இறுக்கமாய்
அமுக்கினார்கள் .
. .
சின்னம்மா –
மினிமம்
பெரியம்மா –
மேக்சிமம்
ஆனார்கள்.
டாடிகள்
திண்டாடினார்கள்.
அத்தையா
சித்தியா, பெத்தியா
மெத்தக்
குழப்பத்தில் “ஆண்டி”!
மாமாவா
சித்தப்பாவா
பெரியப்பாவா . . .
சந்தேக அங்கிளைப்
பார்த்து
ஆண்டி ஹாய்
என்றாள்.
பள்ளிகளில்
இங்கிலிஷ் மிஸ், கணக்கு மிஸ்
கெமிஸ்ட்ரி மிஸ், டிராயிங் மிஸ்
மொத்தத்தில் –
தமிழ் மிஸ்
கல்லூரிகளில்
மரியாதை அதிகம்
மிஸ்கள் எல்லாம்
மேடமானார்கள்.
பைத்தியமான
அம்மாக்காளய்
இருக்க வேண்டும்
என விரும்பி
அவர்களை
மேடமாக்கினார்களோ
தெரியவில்லை.
ஆங்கிலத்தின்
நடுவே
அங்கங்கே
கைதான
தமிழ்சசொற்கள்
கண்ணீர்
வடித்தபடி . . .
கதை வசனம்.
காதலனுக்கும்
காதலிக்கும்
தாய்மொழி வெவ்வேறு
அதற்காக
மொழிபெயர்ப்பாளரை
வைத்துக் கொண்டு
உரையாடல்
நடத்தினால்
என்ன நடக்கும்?
தமிழ் தெரியாப்
பெண்ணைக்
காதலித்த ஒருவன்
–
‘உன்ன நான் காதலிக்கிறேன்’
என்று தமிழில்
சொல்ல
மொழிப் பெயர்ப்பாளன்
‘ஐ லவ் யூ’
என்றான்
மொழிபெயர்த்து.
‘ஐ டூ லவ் யூ’ என்று
தமிழ் தெரியாத
அந்தப் பெண்
அவனோடு
போய்விட்டாள்
நம் கடவுளிடம்
நம் மொழியில்நாம்
காதலாகிக்
கசிந்து
கண்ணீர் மல்கித்
தொழ வேண்டாமா?
தமிழில்
எழுதுவேண்டும்
தமிழாகவும்
எழுதுவேண்டும்
இப்போது
சென்னை மாநகராட்சியின்
சீர்மிகு
துணையால்
பிளைவுட், ஷாப்
வன்பொருள் –
விற்பனைக் கடை ஆயிற்று
பேக்கரி –
அடுமனையகமாயிற்று
எத்தனை எத்தனை
விளம்பரங்களில்
முத்தான தமிழ்ச் சொற்களால்
அத்தனைக்கும்
தமிழ்த்தாய்
முத்தப்
பரிசளிப்பாள்
தமிழின் இரத்தம்
சூரியனில் ஒளியாக
இருக்கிறது.
நிலவில்
குளிச்சியாக இருக்கிறது.
தமிழின்
முகவரியில் நெடுங்காலம்
அழகைச்
சுவாசித்து வளர்ந்த பிறகுதான்
வசந்தம்
இயற்கையோடு வாழப்
புறப்பட்டு வந்தது.
மழை பருவத்து
ஈரம் அவ்ளவும்
மேகங்கள்
தமிழின் மடியிலிருந்து
திரட்டிக்
கொண்டவை அல்லவா?
சொல்லோ – கல்லோ
எதுவானாலும்
மாணிக்கமாய் வைரமாய்
இருக்கட்டும்
அடிபடி நாங்கள்
தயாராய் உள்ளோம். !
கருத்துகள்
கருத்துரையிடுக