தமிழன் இதயம் - நாமக்கல் கவிஞர்
தமிழன் இதயம் - நாமக்கல் கவிஞர்
பெயர்: வெ.இராமலிங்கம்
பெற்றோர்: வெங்கடராமன், அம்மணியம்மாள்
பிறப்பு: 19.10.1888
இறப்பு: 24.8.1972
மனைவி: முத்தம்மாள், சௌந்தரம்மாள்
நாமக்கலில் உள்ள நம்மாழ்வார் பள்ளியில்
ஆரம்பக் கல்வியினையும்,
கோவை மெட்சிகுலேஷன் பள்ளியில்
உயர்நிலைக் கல்வியினையும்,
திருச்சி பிஷப் ஈபர் கல்லூரியில் கல்லூரிக்
கல்வியினையும் நிறைவு
செய்தார். முதல் மனைவிவயிற்று வலியில்
தவறிவிட இரண்டாம் மணம்
புரிந்து கொண்டார். இரு பெண்குழந்தைகள்
மற்றும் மூன்று ஆண்
குழந்தைகளைப் பெற்றார்.தமிழ்ப் புலமை
மட்டுமின்றி ஓவியத்திலும்
புலமை பெற்றவராக திகழ்ந்தார்.வழக்குரைஞர்
திரு நாகராஜ ஐயங்காரின்
தூண்டுதலால் திரு. இராமகிருட்டிணர்,திரு விவேகானந்தர், திலகர்,
அரவிந்தர், லஜபதிராய்
முதலிய தலைவர்களை வரைந்து கண்காட்சி
அமைத்தார்.தேசபக்திப் பாடல்கள்,
பிரார்த்தனை, தமிழன் இதயம், காந்தி
அஞ்சலி,சங்கொலி,
கவிதாஞ்சலி, மலர்ந்த பூக்கள், தமிழ்மணம், தமிழ்த்தேன்,
நாமக்கல்கவிஞர் பாடல்கள், அவனும் அவளும் என்ற கவிதைப்
படைப்புகளையும்,தமிழ்மொழியும்
தமிழரசும், இசைத்தமிழ், கவிஞன்
குரல்,
ஆரியராவதுதிராவிடராவது, பார்ப்பனச் சூழ்ச்சியா, திருக்குறள்
–உரை, கம்பன்
கவிதைஇன்பக் குவியல் முதலிய உரைநடைப்
படைப்புகளையும்,
மலைக்கள்ளன், தாமரைக்கண்ணி,
கற்பகவல்லி, மரகதவல்லி, காதல்
திருமணம், மாமன்
மகள் முதலிய புதினங்களையும் படைத்துள்ளார்.
தமிழன் இதயம்
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தன் அவனுடைய வழியாகும்
அன்பே அவனுடை மொழியாகும்.
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.
கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்
புவியில் இன்பம் பகர்ந்தவெல்லாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.
பத்தினி சாபம் பலித்துவிடும்
பாரில் இம் மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதிகார மதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்
சிந்தாமணி மணிமேகலையும்
பத்துப் பாட்டெனும் சேகரமும்
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரிகத்தினை மிகக் காட்டும்.
தேவாரம் திரு வாசகமும்
திகழும் சேக்கிழார் புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.
தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்
நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.
சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.
உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை சரித்திரம் அசைபோடும் ;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.
யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.
'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும் ;
எல்லாப் புகழும் இவைநல்கும் ;'
என்றே தமிழன் புவிசொல்லும்.
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
'தருவது மேல்' எனப் பேசிடுவான்
பொருள் :
உலகில் தன்னிகர் இல்லாத சமூகமாகத் தமிழினம் விளங்குகின்றது.
தமிழர்கள் எல்லோரும் பிறருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாத
தனித்தன்மை கொண்டவர்களாகக் திகழ்கின்றனர் . வாழ்க்கைக்கு
அமிழ்தம் போன்ற இனிமை பயக்கும் செயல்களைச் செய்வதே தமிழனின்
வழி என்றும், அன்புடைய சொற்களே அவனின் மொழி என்றும்
சிறப்பிக்கின்றார்.
அறிவாகிய கடலைக் கடைந்து திருக்குறள் என்ற அமிர்தத்தைக் கண்டு
எடுத்தவன் . ஐம்புலன்களால் உண்டாகும் நிலையற்ற ஆசைகளை அழித்து
பேரின்ப வாழ்வைத் தரும் அறநூல்களை உலகுக்கு ஈந்தவன். .
கவிதைக்குரிய அத்தனைச் சிறப்புகளையும் இனிமைகளையும் கொண்ட
கம்பராமாயணத்தைப் படைத்துள்ளார் கம்பர். இத்தகைய இன்பம் தரும்
வழிகளை இலக்கியங்களாகப் படைத்தளித்த சிறப்புக்கு உரியவன்
தமிழன்.
அரசக் குடும்பத்தில் பிறந்ததாலும் அதனைத் துறந்து துறவு வாழ்வை
விரும்பி ஏற்ற இளங்கோவடிகள், “பத்தினி சாபம் நிச்சயம் பலிக்கும்” என்ற
மொழியினை இந்த உலகுக்கு உணர்த்திடவே சிலப்பதிகாரம் என்ற
காப்பியத்தை இயற்றினார் .
சீவகசிந்தாமணி, மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள்
ஆகியன யாவும் தமிழ்நாட்டின் நாகரிகத்தினை எடுத்துக் காட்டும்
அணையா விளக்குகள் ஆகும்.
தேவாரம், திருவாசகம், சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் சைவ
நூல்களும் , பன்னிரு ஆழ்வார்களின் உரைகளான வைணவ
நூல்களும் தமிழர் வாழ்க்கையினைக் கட்டுவனவாகும் .
தமிழனின் ஞானத்தையும் அவன் திறமையையும் தாயுமானவரின்
பாடல்கள் மூலம் அறியலாம். பட்டினத்தார் உள்ளிட்ட சித்தர்களின்
பாடல்கள் தமிழர்களின் தனிப் பெருஞ்
சொத்தாக விளங்குகின்றன .
வாழ்வில் எதிர் வரும் சோதனைகளை அச்சத்தை விடுத்து ஊக்கமுடன்
எதிர்கொண்டு வாழ, பாரதியின் பாடல்கள் துணையாகின்றன. இவையாவும்
தமிழரின்
புகழைப் பறைசாற்றுகின்றன என வியக்கின்றார் கவிஞர்.
அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லவனாகவும், கல்வி கற்கும்
யாவருக்கும் நல்லவனாகவும் விளங்கியவன்.இதுபோல இன்னும் பல
சிறப்பான அடையாளங்களை
உடையவன் .
சிற்பங்களைச் செதுக்குவதிலும் , சித்திரங்களைச் தீட்டுவதிலும்,
இசைப்பதிலும் அவனுக்கு நிகர் வேறு எவருமில்லை. கருங்கல்லைக் கூட
களிமண்ணைப்போல அவனுடைய திறமையால் ஒளிவீசச் செய்வான் .
யாழ், குழல், நாதஸ்வரம் உள்ளிட்ட எண்ணற்ற இசைக்கருவிகளைக்
கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்தி, அவை தரும் பண்களை வகுத்து
இசை என்றொரு கலையை மிக நுணுக்கமாக உலகிற்கு அளித்தவன்
தமிழன் என்றால் அதில் மிகையாகாது
.
கொல்லாமை , பொய்யாமை முதலியவற்றைக் கடைபிடித்து
வாழும் வாழ்க்கையே அறம் நிறைந்த வாழ்க்கையாகும். அத்தகைய
வாழ்க்கையே அழிவில்லாத புகழைத் தரும் என்று வாழ்ந்து காட்டியவன்
தமிழன்.
மானத்தோடு கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே
தமிழனின் அவா . அந்த மானத்திற்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் தன்
உயிரைக் கூட விட்டு விடுவான்.
பிறரிடம் தானம் பெற்று வாழ்வதை இழிவாகக் கருதுவான். தன்னிடம்
பொருள் இ்லையென்றாலும் அடுத்தவருக்கு உதவி செய்வதை
உயர்வாகக் கருதுவான்.
கருத்துகள்
கருத்துரையிடுக