சிற்றிலக்கியம் - சிற்றிலக்கியம் என்றால் என்ன- 96 சிற்றிலக்கிய வகைகள்

 

                                                       சிற்றிலக்கியம்

 

தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்களைப் பேரிலக்கியம், சிற்றிலக்கியம்

என்று பொதுவாக வகைப்படுத்தும் மரபு உள்ளது.

 

சிற்றிலக்கியம் என்றால் என்ன?

 

சிற்றிலக்கியம் - சிறிய இலக்கியம் எனப் பொருள் படுகிறது. 

அறம் , பொருள் , இன்பம் , வீடு பேறு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை   

அடிப்படையாகக் கொண்டு காப்பியங்கள் படைக்கப்பட்டன. 

இந்த நான்கு  உறுதிப் பொருள்களில் ஒன்றோ இரண்டோ அல்லது அதற்கு 

மேற்பட்ட உறுதிப் பொருள்கள் குறைந்து வந்தால் அதற்கு சிற்றிலக்கியங்கள் 

என்று பெயர் .  

தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் , அந்தாதி முதலியவற்றைச் 

சிற்றிலக்கியம் என்பர். 

சிற்றிலக்கியம் அளவில் பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின்

எண்ணிக்கை சுருங்கியதாக அமையும் .

அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையில்   அமையும்.

 கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல்,மக்களில் சிறந்தவர்கள்  இதன் 

தலைமக்களாக  இருப்பர் . 

தற்காலத்தில் ஒருவரை தூற்றுவதற்காகவும் இவ்வகை இலக்கியங்கள் 

பாடப்படுகின்றன . 

பிரபந்தங்கள்

சிற்றிலக்கியங்களை முதலில் பிரபந்தங்கள் என்று வழங்கினர். 

பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு வடிவமைக்கப்பட்டது என்பது பொருள். 

காலப்போக்கில் சிற்றிலக்கியம் என்ற சொல்லே இவ்வகை இலக்கியங்களைக் 

குறிக்க  நிலைபெற்றது.


சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை

 சிற்றிலக்கியம் என்பதனுள் 96 வகையான இலக்கியங்கள் காணப்படுகின்றன 

என்று பொதுவாகக் கூறும் வழக்கம் உள்ளது. 

சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கி.பி.

பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல் என்ற பாட்டியல்

நூல் கூறுகின்றது. 

இந்நூல்,

பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்

தொண்ணூற் றாறுஎன்னும் தொகையதுஆம்

என்கிறது.

 

அதாவது, பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகை முதலாகப் புராணம்

ஈறாகத் தொண்ணூற்றாறு வகைப்பட்டது பிரபந்தம் என்பது இதன் பொருள்

ஆகும்.

வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியும் 96 இலக்கிய வகைகளைக்

குறிப்பிடுகின்றது..

 

சிற்றிலக்கியக் காலம்

நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்று அழைக்கலாம்.

அவ்வகையில் கி.பி 15, கி.பி 16, மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளை 

நாம் சிற்றிலக்கிய காலமெனக் கூறலாம்.

பரணி 

பரணிக்கு இலக்கணமாக இலக்கண விளக்கம் என்னும் நூல் 

  

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி
என்று கூறுகிறது .  

யானையைக் கொன்ற போர்க்களம் அல்லாத பிற போர்க்களங்கள் பரணி பாடுவதற்குத் தகுதி 

உடையன அல்ல. 

பரணி பெயர்க் காரணம்

பரணி என்பது நட்சத்திரத்தின் பெயர்.

காளியையும் எமனையும் தெய்வங்களாகக் கொண்ட நாள்.

பரணி நாளில் பிறந்தவன் பெரும் வீரனாவான் என்பதும் நம்பிக்கை. 

எனவே போர்க்களத்தில் யானைகள் பலவற்றைக் கொன்று, பல

உயிர்களையும் யமன் கவர்ந்து கொள்ளுமாறு செய்து, அரசனின் வீரம்

வெளிப்பட, போர்க்களத்தில் காளிக்குக் கூழ் சமைத்து வழிபட்ட

நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இந்நூல் பரணி என்று பெயர் பெற்றிருக்க

வேண்டும். 

காளிக்கு உரிய நாள் பரணி. காளியைத் தெய்வமாகக் கொண்டு

பாடப்படுவதால் இந்நூலுக்குப் பரணி எனப்பெயர் வந்தது என்றும்

விளக்கம் கூறுவர்.

 பரணியின் அமைப்பு

பரணி இலக்கியம் பத்து உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது.

பத்து உறுப்புகள் அனைத்துப் பரணி நூல்களுக்கும் உரியன.

ஒரு சில பரணிகளில் இந்தப்பத்து உறுப்புகள் அல்லாது ஒரு சில   

உறுப்புகள் கூடுதலாகவும் உள்ளன. 

கலிங்கத்துப் பரணியில் இந்திரசாலம் ராச பாரம்பரியம் போன்ற   

உறுப்புகள் கலிங்கத்துப் பரணியில் இடம் பெற்றுள்ளன.

பத்து உறுப்புகள்

கடவுள் வாழ்த்து ,கடை திறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது

பேய்களைப் பாடியது ,பேய் முறைப்பாடு ,காளிக்கு கூளி கூறியது ,களம் பாடியது

கூழ் அடுதல். 

பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல்

வகைகளுள் ஒன்று.

புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், புலவர் பெருமக்கள், அரசர்,

அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக

உருவகித்துக் கற்பனை அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும்.

பிள்ளைத் தமிழின் வகைகள் :

ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என

இரண்டுவகைப்படும் .

மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின்

வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர்.

ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப்

பாடப்படுவர் .

பிள்ளைத்தமிழ் முன்னோடி

திருமாலைக் குழந்தையாக்கிக்கொண்டு பெரியாழ்வார் பாடிய இந்தப்

பிள்ளைத்தமிழ் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு

முன்னோடியாகத் திகழ்கிறது.

பருவங்கள்

ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில்,

சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது.

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு,

அம்மானை, ஊசல் எனும் பருவங்கள்  இடம் பெறுகின்றன.

பள்ளு

பள்ளு மருதநில இலக்கியமாகும்.

பள்ளு இலக்கியங்கள், வேளாண்மை குடிகளான பள்ளர்களின்

வாழ்க்கை பற்றியவை.

தமிழ் சிற்றிலக்கிய வகைகளிலே, பள்ளு இலக்கியங்களே அதிகமாக

உள்ளன எனக் கூறப்படுகின்றது. நெல்லு வகையை எண்ணினாலும்

பள்ளு வகையை எண்ண முடியாது என்னும் பழமொழி

வழங்கப்படுகிறது

முதற்பள்ளு

பள்ளு  இலக்கியங்களில்  திருவாரூர் தியாகப் பள்ளு  என்பதுதான்

முதற்பள்ளு இலக்கியம் என்ற கருத்து உண்டு.

முக்கூடற் பள்ளு முதற்பள்ளு என்பாரும் உள்ளனர்.

1642-இல் இயற்றப்பட்ட ஞானப் பள்ளே முதற்பள்ளு என்ற கருத்தும்

உண்டு.

பள்ளு இலக்கியப் பொது அமைப்பு

காப்பு, கடவுள் வணக்கம், பாயிரம் ஆகியன முறையாகப்

படைக்கப்பட்டுள்ளன. நூலின் தொடக்கமாகப் பள்ளன் தோன்றித்

 

தலைவனின் உயர்வை விளக்குவான்.

பின்பு பள்ளன் பள்ளியர் தம்  குடிப் பெருமைகளைக் கூறுவர்.

இவற்றைத் தொடர்ந்து நாட்டு வளம், நகர்வளம் கூறப்பெறும்.

மழையின் வரவு பற்றிக் குறி அறிந்து மழை வேண்டிப் பாடப்படும்.

பின்பு மழை பொழியும். ஆற்றில் வெள்ளம்  பெருகி ஐந்து வகை

நிலங்களும் நீர் பெறும்.

பள்ளனும் பள்ளியரும்

பண்ணைக்காரன் வரும்போது, பள்ளியர் அவனிடம் பள்ளனைப் பற்றி

முறையிடுகின்றனர். இளைய பள்ளியின் அழகில் மயங்கிக் கடமையை

மறந்த பள்ளனைப் பண்ணைக்காரன் கடிந்து உரைக்கிறான். பள்ளன்

தன் தவறுகளை மறைக்கப் பண்ணைக்காரனிடம் வித்துவகை,  மாட்டு

வகை, ஏர் வகை முதலியவற்றைக் கூறுகின்றான்.

மூத்தபள்ளி முறையீடு

மூத்த பள்ளி பண்ணைக்காரன் முன்பு தோன்றுகிறாள். தன்னை ஒதுக்கி

வாழும் பள்ளனைப் பற்றிக் கூறி முறை இடுகிறாள். அதனைக் கேட்ட

பண்ணைக்காரன் சினந்து பள்ளனைக் குட்டையில்  மாட்டி விடுகிறான்.

பின்பு மூத்த பள்ளி மூலம் விடுவிக்கப்படுகிறான்.

பயிரிடும் பள்ளியர்

பண்ணையில் பயிர் இடும் வேலை தொடங்குகிறது. நிலத்தை உழுது

விதைக்கிறார்கள். பயிர் முளையிட்டு வளர்கிறது. நாற்று நடுகிறார்கள்.

களை அகற்றி நீர் பாய்ச்சுகின்றனர். பயிர் விளைகிறது. முற்றிய கதிரை

அறுத்து நெல்லடித்துக் குவிக்கிறார்கள். உழவு வேலையில் பள்ளியர்

பங்குபெறும் நிகழ்ச்சிகள் பாடல்கள் மூலம் காட்சிப்படுத்தப் படுகின்றன.

பள்ளியர் மோதல்

பள்ளன் நெற்கணக்குக் கூறுகின்றான். பள்ளியர் இருவரும் கலகம்

இட்டு ஒருவரை ஒருவர் ஏசிப் பேசுகின்றனர். இறுதியில் இருவரும்

மனம் பொருந்தி வாழ இசைகின்றனர். நல்ல விளைவையும் நல்ல

வாழ்வையும் அருளிய இறைவனை வேண்டிப் பணிவதோடு பள்ளு

முடிவடைகிறது. 

தூது

ஒருவர் தன் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்க இடையே

பிறிதொருவரை அனுப்புவதே தூது.

அரசர்கள் பகைவர்களிடமும், புலவர்கள் வள்ளல்களிடமும், தலைவன்

தலைவியிடமும், தலைவி தலைவனிடமும் தூது அனுப்பியுள்ளனர்.

தூது வகைகள்

அகத்தூது, புறத்தூது

புறநானூறு -புறத்தூது

அதியமான் தொண்டைமான் என்னும் இன்னொரு அரசனுக்கு

ஔவையாரைத் தூது அனுப்பியது குறித்த புறநானூற்றுப் பாடல்

இருக்கிறது.

அகநானூறு -அகத்தூது   

அகநானூற்றில் காதல் கொண்ட தலைவி கடற்கரையில் ஓடும்

நண்டைப் பார்த்து தன் தலைவனிடம் சென்று தன் நிலையை எடுத்து

சொல்லுமாறு அமைந்த பாடல் இருக்கிறது.

முதல் தூது

தூதில் அமைந்த முதல் இலக்கியம் உமாபதி சிவாச்சாரியாரின்

நெஞ்சுவிடு தூது. தன் நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக

அனுப்புவதாக எழுதப்பட்டது.

வட மொழியில் இவை சந்தேஸ காவியங்கள் என்று

சொல்லப்படுகின்றன.

காளிதாசனின் மேகசந்தேசம் மிகப்புகழ்பெற்ற காவியம்

தூது  இலக்கணம்

தலைவியைப் பிரிந்து வாடும் தலைவனோ, அல்லது தலைவனைப்

பிரிந்து வாழும் தலைவியோ, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு

பறவைகளையோ, விலங்குகளையோ அல்லது அஃறிணைப்

பொருள்களையோ தூதாக அனுப்புவது தூது.

கலி வெண்பாவால் பாடப்படுவது.

தூது பொருள்கள்

தூது சொல்லி விடுவதற்குரிய பொருள்கள் எவை என்பதை இரத்தினச்   

சுருக்கம்  எனும் நூல்,

இயம்புகின்ற காலத்து எகினம்மயில் கிள்ளை

பயன்பெறும் மேகம்பூவை பாங்கி – நயந்த குயில்

பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்

தூதுரைத்து வாங்கும் தொடை”

எனக் கூறுகின்றது.

அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகணவாயப்புள், தோழி, குயில், மனம்,

தென்றல், வண்டு, என்னும் பத்து தூது பொருள்கள் தூது விடுவதற்குத்

உகந்தவை என்பதை இரத்தின சுருக்கம் கூறுகின்றது. இவையன்றி

வேறு பல புதிய பொருட்களைத் தூது விடுத்ததாகப் பாடிய நூல்களும்

காலப்போக்கில் தோன்றியுள்ளன.

தூது நூல்கள் :

நெஞ்சு வீடு தூது , தமிழ் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது  

உலா
 
யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை

இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது

உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அரசனோ

இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு

மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு

பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும்.

இலக்கணம்

கலிவெண்பாப் பாட்டினால் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை

தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலாவரும் 

தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் 

கூறுவது  இலக்கணம்.

ஞானக்காதல்

இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள் காதல்.

இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர்.

உலாவின் பகுதிகள்

முன்னிலை

உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல்

ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் 

என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும்.

பின்னெழுநிலை

இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் 

கூறுவன பின்னெழுநிலை எனப்படும்.

உலா நூல்கள்


இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூத்தர்


குலோத்துங்க சோழன் உலா - ஒட்டக்கூத்தர் ,

சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர்,

திருக்குற்றால நாதர் உலா - திரிக்கூடராசப்பக் கவிராயர்

அந்தாதி

அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம்,

தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சொற்களின்

சேர்க்கையால் உருவானது.

ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து

வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது,

அந்தாதிச் செய்யுள் ஆகும்.

அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது, அது

அந்தாதித் தொடை எனப்படும் .

அந்தாதியின் தோற்றம்

சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தில்

அந்தாதி அமைப்பு உண்டு.

எனினும் அந்தாதி இலக்கியமாகத் தனியே அமைந்தவற்றில் இன்று

கிடைக்கும் பழைய நூல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத்

திருவந்தாதி ஆகும்.

அந்தாதி வகைகள் சில

ஒலியந்தாதி

பதிற்றந்தாதி

நூற்றந்தாதி

வெண்பா அந்தாதி

யமக அந்தாதி

நீரோட்ட யமக அந்தாதி

சில அந்தாதி நூல்கள்

அற்புதத்திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்

அபிராமி அந்தாதி-அபிராமி பட்டர்

திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி

திருவேகம்பமுடையார் அந்தாதி - பட்டினத்தடிகள்

கந்தர் அந்தாதி- அருணகிரிநாதர்

கலம்பகம்

பெயர்க்காரணம்

1. கலப்பு - கலம்பு + அகம். அகத்தே 

பலவிதமான கலப்பினைக் கொண்ட 

நூல் (உறுப்பு, பா) கலம்பகம்.

2. கலப்பு - கலம்பு + அகம். புறம் பற்றிய 

நூலாக இருப்பினும் "அகம்" கலந்து 

வரும் நூல் கலம்பகம்.

3. கலம் + பகம் கலம்-12, பகம் பாதி. 

அதாவது ஆறு . ஆக 12 + 6 = 18. 

பதினெட்டு உறுப்புக்களைக் கொண்ட 

நூல் ஆதலால் கலம்பகம்.

அளவு:

தேவர் 100, முனிவர் 95, அரசர் 90, 

அமைச்சர் 70, வணிகர் 50, வேளாளர் 30.

உறுப்புகள்:

1. புயம், 2. தவம், 3. வண்டு, 4. அம்மானை, 5. பான், 6. மதங்கு, 7. கைக்கிளை, 8. சம்பிரதம், 9. ஊசல், 10. கிளி, 11. மடக்கு, 12. ஊர், 13. மறம், 14. காலம், 15. தழை, 16. இரங்கல், 17. தூது,18.களி.

முதல் கலம்பக நூல்:

கலம்பகம் என்றாலே "நந்திக் கலம்பகம் 

என்ற நூலே முதல் கலம்பக நூல்

பிற கலம்பக நூல்கள்

தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர் 

கலம்பகம், மதுரைக்கலம்பகம், 

திருவரங்கக் கலம்பகம், கச்சிக் 

கலம்பகம், திருக்காவலூர்க் கலம்பகம் 

போன்றன தோன்றின.


 

  

                                



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்