பொருநர் ஆற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்- பத்துப்பாட்டு
பொருநர் ஆற்றுப்படை - முடத்தாமக்
கண்ணியார்
இது கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. இந் நூல்
பரிசில்பெற்ற
பொருநன், பரிசில் பெற விழையும் பொருநனை ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது.
பொருநனை விளித்தல்
அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,
சாறு கழி வழி நாள். சோறு நசை உறாது,
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!
பொருள் : என்றும் அறாத புது வருவாயையும் அகன்ற இடங்களையும் உடைய பெரிய
ஊர் திருவிழாவுக்குச் சென்று பலவகை உணவுகளையும் உண்டு, விழா முடிந்த மறுநாள்
உணவில் விருப்பம் பெறாமல் வேறு இடங்களுக்கு செல்வதற்காக
எண்ணும் ,யாழ் வாசிக்கும் முறைகளை எல்லாம் அறிந்த பொருநனே.
பாலையாழின் அமைப்பு
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்;
விளக்கு அழல் உருவின் விசி உறு பச்சை, 5
பொருள் : யாழ் ஓர் உறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் நடுவில் மேடாகவும்
இருபக்கமும் தாழ்ந்து பள்ளமாகவும் இருக்கிறது. அதனைபார்த்தால் மான்
குழம்பினால் அழுத்திய இடம் எப்படி இடையில் மேடும் பள்ளமுமாக இருக்குமோ அப்படி
இருக்கிறது.யாழை மூடிய உறை விளக்கின் எரிகின்ற நிறத்தைப் போன்று சிவப்பாக
இருக்கிறது .
எய்யா இளஞ் சூல் செய்யோள் அவ் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல,
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை;
அளை வாழ் அலவன் கண் கண்டன்ன,
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி; 10
பொருள் : யாழானது தோல் போர்வையால் இறுக்கி மூடப்பட்டிருக்கிறது.
யாழின் மேல் போர்வையை தைத்துப் போட்டிருக்கிறார்கள். அப்போர்வை இன்னும் அறிய
முடியாத இளம் கர்ப்பத்தை உடைய சிவந்தநிறமுள்ளவளின் அழகிய வயிற்றில்
மெல்லியதாக மயிர் தொடர்ந்து இருப்பது போல் காட்சியளிக்கிறது.
யாழின் குடத்தைத் தைப்பதற்குப் பயன் படுத்தப்பட்ட ஆணிகள் வலையில் வாழும்
நண்டுகளின் கண்களைப் போல் தோன்றுகின்றன.
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண் நா இல்லா அமை வரு வறு வாய்;
பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்;
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்;
கண்கூடு இருக்கைத் திண் பிணித்
திவவின்; 15
பொருள் : வீணையின் தலைப்புறமானது வளைந்து இருக்கிறது . அதன் முடிவில் மேல்
நோக்கு இல்லாமல் அமைந்த , நாக்கு இல்லாத வெறும்
வாயைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அந்த வாய் எட்டு நாளான பிறையை போல்
காட்சியளிக்கிறது.யாழினுடைய தண்டு பாம்பு படம் எடுப்பது போல் ஓங்கின கரிய
தண்டை உடையதாக இருக்கிறது. யாழில் வாரைக் கட்டியிருக்கிறார்கள் அது கரிய
நிறத்தை உடைய பெண்ணின் அழகிய இரண்டு முன் கைகளிலும் ஒத்து அணிந்த
வளையல்களைப் போல் உள்ளன.நரம்புகளை ஒன்றோடொன்று நெருக்கமாக அமையும்படி
திண்ணிய கட்டுதலை உடைய வார்க்கட்டை உடையதாக இருக்கிறது.ஒன்றோடு ஒன்று
கூடும்படி இருத்தலை உடைய திண்ணியதாகப் பிணிக்கப்பட்ட நரம்பு கட்டையும்
உடையதாக இருக்கின்றது.
ஆய் தினையரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசித் தொடையல்;
மணம் கமழ் மாதரை மண்ணியன்ன,
அணங்கு மெய்ந் நின்ற அமை வரு, காட்சி; 20
பொருள் : யாழ் விரலால் சுண்டி அசைக்கும் நரம்புகளை உடையது. ஆகையால் அதி
அழகினை உடைய தினையை குத்தின அரிசி போலிருக்கும் குற்றம் சிறிதும் இல்லாத
நரம்புகள் அவை.அந்த நரம்புத் தொடர்ச்சி இசை முற்றுப்பெற்ற நீண்ட கட்டுதலை
உடையது.திருமணம் செய்யும் மங்கையரை அலங்காரம் செய்தல் போன்று மாதங்கி
எனும் தெய்வம் தன்னிடத்தில் பொருந்தி நின்ற அமைதியை உடையஅழகை
உடையதுமாக உள்ளது.
ஆறு அலை கள்வர் படை விட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை
பொருள் : அந்த யாழ் பாலை யாழ் எனும் வகையைச் சார்ந்தது. போகும் வழியில்
ஆறலை கள்வர் ஆகிய வழிப்பறிக்காரர்கள் இந்த யாழின் இசையைக் கேட்டால்
அதைக் கேட்டுத் தம்மை மறந்து நிற்பார்கள். அவர்கள் கையில் உள்ள படைகள் தாமே
நழுவிவிடும்.அருளுக்கு மாறாகிய கொடுமையை அவர்களிடமிருந்து நீக்கிவிடும்
மருவினிய பாலை யாழ்.
யாழை மீட்டிப் பாடுதல்
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,
சீருடை நன் மொழி நீரொடு சிதறி
பொருள் : அந்தப் பாலை யாழினை வழிச் செல்பவர்களோடு செல்லும் விறலி
வாசிக்கிறாள் . நரம்புகளைத் தழுவியும் உருவியும் ஒன்றை விட்டு ஒன்றை மீட்டியும்
பாடுகிறார்கள். அப்படி யாழை வாசிக்கும்போது சிறப்பு பொருந்திய தெய்வங்களையும்
அதற்குரிய இலக்கணங்களுடனும்விரிவாகப் பாடுகிறாள் விறலி.
பாடினியின் கேசாதிபாத வருணனை
அறல் போல் கூந்தல், பிறை போல் திரு
நுதல், 25
கொலை வில் புருவத்து, கொழுங் கடை
மழைக் கண்,
இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர்
வாய்,
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல்,
மயிர் குறை கருவி மாண் கடை அன்ன
பூங் குழை ஊசற் பொறை சால் காதின், 30
பொருள் : விறலியின் கூந்தல் கரு மணலை போல கருமையாக இருக்கிறது. அவள்
அழகிய நெற்றி பிறை போல தோற்றமளிக்கிறது.அவளுடைய புருவம் கொலை
செய்வதற்காக வளைந்திருக்கும் வாளைப் போல உள்ளது. அவளுடைய கண்கள் வளமான
ஓரங்களையுடையகுளிர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அவளுடைய வாய் இலவம் பூவின்
இதழைப் போல அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அந்த வாயிலிருந்துவரும் சொல்
இனிமையாக இருக்கிறது . அவள் பற்கள் வெள்ளை வெளேரென்று முத்துக்களை
வரிசையாக வைத்தது போன்ற காட்சிஅளிக்கின்றன . அந்த பற்கள் சிறிதும் குற்றம்
இல்லாமல் உள்ளன. அவளுடைய காதுகளில் பொலிவு பெற்று குறைகளை
அணிந்திருக்கிறாள் மயிரைநறுக்குகின்ற கத்திரியின் பெருமையை உடைய அடி
பக்கத்தைப் போல அவை உள்ளன. அந்த காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசல்
ஆடுகின்றன. அந்த அணிகலன்களைக் கூட பாரமாக அணிந்திருக்கிறாள் அவள் அவ்வளவு
மென்மையான விறலி..
நாண் அடச் சாய்ந்த நலம் கிளர்
எருத்தின்,
ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை,
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்,
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்,
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து, 35
பொருள் : அவள் நாணம் உடையவள் அந்த நாண் அவளை நிமிர்ந்து பார்க்கச் செய்யாமல்
தடுக்கிறது . அவள் தன் பிடரியைக் கீழே சாய்த்துஇருக்கிறாள். அந்த பிடரி அழகாக
இருக்கிறது. அவளுடைய பருத்த தோள்கள் அசைகின்ற மூங்கில் போல்
இருக்கின்றன. அவளுடைய முன்கைமெல்லிய மயிர்களை உடையதாக
காட்சியளிக்கிறது. உடைய விரல்கள் மென்மையானவை. உயர்ந்த மலையின் மேல்
வளர்ந்து இருக்கும்காந்தளைப் போன்றவை.அவள் விரலில் உள்ள நகங்கள் கிள்ளையின்
மூக்கைப் போல் ஒளி விடுகின்ற பெருமையை உடையன . தனங்கள்
பார்ப்பவர்களுக்கு வருத்தத்தை
உண்டாக்குவது. அழகுத் தேமல் படர்ந்தது.
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை,
நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த
கொப்பூழ்,
உண்டு என உணரா உயவும் நடுவின்,
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்,
இரும் பிடித் தடக் கையின் செறிந்து
திரள் குறங்கின், 40
பொருள் : அவளுடைய கொப்பூழ் நீரில் உள்ள சுழியை போல் காணப்படுகிறது .
அவளுடைய இடை உண்டோ இல்லையோ என்று உணரமுடியாதஅளவிற்கு
வருந்துவதாக இருக்கிறது. பலமணி கோத்த வடங்களை மேலே அணிந்திருக்கிறாள்.
அவளுடைய துடைகள் சரிந்தும் திரண்டும் உள்ளன. பெரிய பெண் யானையின்
விசாலமான கையைப் போல அவை உள்ளன.
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின், பெருந் தகு சீறடி,
அரக்கு உருக்கு அன்ன செந் நிலன்
ஒதுங்கலின்,
பரல் பகை உழந்த நோயொடு சிவணி,
மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் 45
பொருள் : ஒழுங்காக உள்ள திருந்திய காலுக்கு ஏற்ப ஓடி இளைத்த
நாயின் நாவினைப் போல பெருமையும் தகுதியும் உடைய சிறிய
பாதத்தின்
அடியை உடையவளாக இருக்கிறாள். அரக்கை உருக்கி வைத்தாற் போல செம்மையும்
வெம்மையும் உடைய
நிலத்தில் நடந்ததனாலே பயன் கற்கள்
ஏற்படுத்திய வருத்தத்தோடு பொருந்து இருக்கிறாள். பரல் கற்களில் நடந்தமையால் அவள்
காலில்
கொப்புளங்கள் உண்டாகி இருக்கின்றன. அந்த
கொப்புளங்கள் மரல் என்ற மரத்தில் பழுத்த பழம் போல் இருக்கின்றன. அந்த
கொப்புளங்களில் இருந்து நீர் தழும்புகிறது.
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின்,
பெடை மயில் உருவின், பெருந் தகு பாடினி
பொருள் : நல்ல உச்சி காலமான சந்தியிலே நடுவிலே நடத்தலை தவிர்த்து
இளைப்பாறி வருகிறார்கள் அப்படித் தங்கும் பொழுது அதற்காக அவள்
பாடுகிறாள் பெண்மயில் உருவையும்
பெருமையையும் தகுதியையும் உடையவள் .
காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்
பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி,
இலை இல் மராஅத்த, எவ்வம் தாங்கி, 50
வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்,
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய
பின்றைப்
பொருள் : அந்த விறலி பாடின பாட்டை அனுபவித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஆண்
யானைகள் உலாவுகின்ற வழிகளை உடைய காட்டில்தங்குகிறார்கள். அவர்கள் தங்கிய
இடம் பாலை நிலம் ஆதலின் அங்கே உள்ள மரா மரங்களின் இலைகள் காய்ந்து உதிர்ந்து
மொட்டையாகநிற்கின்றன. அதன் கீழே வெயிலினால் உண்டாகிய துன்பத்தைத் தாங்கிக்
கொண்டு அமர்ந்திருக்கிறார்கள் . அந்த மரா மரத்தின் நிழல் அடர்ந்துஇல்லாமல்
வலையை மேலே கட்டினால் ஒத்த இடையிட்ட நிழலாக இருக்கிறது . இடையிடையே
கதிரவனின் கிரணங்கள் வந்து வெப்பத்தைதருகின்றன. அங்கேயே தங்கியவர்கள் காற்றிலே
உறையும் கடவுளைப் பாடி மனமகிழ்ச்சியைச் செய்யும் முறைகளைச் செய்து
முடிக்கிறார்கள்.
பரிசு பெற்றோன் பெறாதொனை விளித்தல்
பீடு கெழு திருவின், பெரும் பெயர், நோன் தாள்,
முரசு முழுங்கு தானை, மூவரும் கூட
அரசவை இருந்த தோற்றம் போலப் 55
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ! கொண்டது அறிந!
அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது,
ஆற்று எதிர்ப்படுதலும் பரிசு பெற்றோன்
பாடின முறை
பொருள் : பெருமைமிக்க செல்வத்தையும் பெரும் புகழையும் வலிமையான
முயற்சிகளையும் உடையவர்களும் வெற்றி முரசுகள் முழங்கும்சேனைகளை
உடையவர்களும் ஆகிய சேர சோழ பாண்டியர் என்ற மூன்று மன்னர்களும் ஒருங்கே
தங்கியிருந்த தோற்றத்தைப் போல, வாயினால்பாடும் பாடலை தொடங்கி எழுந்திருந்த
பயன்களை உடைத்தாகிய கூத்தருக்கு தலைவனே, கேட்பவர்கள் மனதில் எண்ணுவது
உணர்ந்து அதற்குஏற்ப பாடும் தன்மை உடையவர்கள் இவர்கள். பிறர் மனத்தில்
கொண்டவற்றை அறிந்து பாடுபவன் இவன்.எங்கே போவது என்று தெரியாமல் வழிமாறி
நீங்காமல் நான் வரும் வழியில் எதிர் படுதலும் நீ பண்ணிய தவத்தின் பயனே.
போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந! 60
பொருள் :அரசவைகளில் அரசர்களை மேம்படுத்திக் கூறுபவனே நான் சொல்வதை
விரும்பி கேட்பாயாக.
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று
எழுமதி; வாழி, ஏழின் கிழவ!
பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன்
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின், 65
நசையுநர்த் தடையா நன் பெரு வாயில்
இசையேன் புக்கு, என் இடும்பை தீர,
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி,
பொருள் : வருந்துகின்ற பசியினால் துன்புற்று நிற்கின்ற நின்னுடைய கரிய பெரிய
சுற்றத்தோடு நெடுங்காலமாக இருந்து வரும் பசியானது இன்று
நீங்குவதை விரும்பினால் ஏழு சுவரங்களை உடைய பாடல்களை பாடும் உரிமை
உடையவனே, சிறிதும் தாமதியாமல் எழுவாயாக நீ வாழ்வாயாக.
நானும் உன்னை போல் தான் இருந்தேன். எங்கே பழுத்த மரம் உள்ளது என்று தேடும்
வவ்வாலை போல இருந்தேன். இலும் என்ற ஒளியைஉடைய பரந்த இடத்தையுடைய
சுற்றுச்சுவரைப் . பெற்ற அவனுடைய அரண்மனை வாயில் அலங்காரம்
பொருந்தியது. மிகப்பெரியது. அவனிடம்இரவலர் விருப்பத்தோடு வந்தால் வாயில்
அவர்களுக்கு அடையாமல் திறந்திருக்கும். அது பல நிறங்களை உடைய பெரிய வாயில்.
அங்கே நான்போகும்போது யாரிடத்திலும் உள்ளே போகலாமா என்று
கேட்கவில்லை. நேரே உள்ளே புகுந்து விட்டேன் . என் உடம்பு இளைத்து இருந்தது.
இங்கே நலம் பெறலாம் என்று எண்ணிய போதே
என் இளைப்புத் துன்பம் தீர்ந்து விட்டது.
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப,
கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி70
பொருள் :என் கையில் வைத்திருந்த உடுக்கையை அடித்தேன் படம் விரித்த பாம்பினை
போல் அடித்து அடித்து என் கையில் வடுபட்டுக் கிடந்த அடிக்கும் இடம் அகன்ற தடாரி
அது.
இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர்
வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்,
ஒன்று யான் பெட்டா அளவையின்
பொருள் : அப்போது நள்ளிருள் போய் விடிந்து இருந்தது. விடிவெள்ளி முளைத்திருந்தது .
அப்போது இரட்டை தாளத்திற்கும் பொருந்தும் ஒரு பாட்டினை நான் பாடினேன் .
அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
............................ஒன்றிய
கேளிர் போல, கேள் கொளல் வேண்டி,
வேளாண் வாயில் வேட்பக் கூறி, 75
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ,
பருகு அன்ன அருகா நோக்கமோடு,
உருகுபவை போல் என்பு, குளிர் கொளீஇ,
ஈரும் பேனும் இருந்து இறைகூடி,
வேரொடு நனைந்து, வேற்று இழை நுழைந்த 80
துன்னல் சிதாஅர் துவர நீக்கி,
நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக் கனிந்து
அரவு உரி அன்ன, அறுவை நல்கி,
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து,
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர், 85
போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால்,
வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,
ஆர உண்டு, பேர் அஞர் போக்கி,
செருக்கொடு நின்ற காலை,
பொருள் : பல நாளாக மணம் பொருந்திய நண்பனை போல என்னுடன் உறவு
கொள்ளுதலை விரும்பி அவன் என்னிடம் அன்பாக பேசினான் . இவனைப் போன்றவரிடம்
என்றுமே இருக்கலாமே என்று நான் விரும்பும்படி உபசார
வார்த்தைகளைக் கூறினான். அவன் கண்ணிலே காணும்படி
தனக்கு அருகான இடத்திலே என்னை அமரச் செய்தான். என்னைப் பருகுவது போன்ற
தனியாத பார்வையோடு என்னை நோக்கினான் . அவனுடைய பார்வை என்னை உருக்கி
விட்டது . அதனால் என் எலும்பெல்லாம் குளிர்ச்சியை உடையவை ஆயின . பிறகு என்
இடையில் இருந்தகந்தையை முற்றும் நீக்கினான். அந்தக் கந்தை எப்படி இருந்தது
தெரியுமா? ஈரும் பேனும் கூடி அரசாண்டு கொண்டிருந்தன. அதை நீக்கிய பிறகு
எனக்கு வேறு ஆடை அணிவித்தான் என் கந்தை உடை வேர்வையால் நனைந்திருந்தது .
வேறு நூலில் அங்கங்கே தைத்திருந்தேன். அக்கந்தையைமுற்றிலும் நீக்கினான். எனக்கு
புதிய ஆடையை வழங்கினான் . நூலில் நெய்யப்பட்ட ஆடை ஆனாலும் நெருங்கி
செய்தமையால் ஓர் இழைக்கும்மற்றொரு இழைக்கும் இடையே பார்வை
செல்லாது. மிகவும் நுண்மையான பூ வேலை செய்த ஆடை அது. பாம்பின் உரியைப்
போல்மெல்லியதாக இருந்த ஆடையை வழங்கினான். அதன் பின் அந்த மாடத்தில்
பலவகை அணிகலன்களை அணிந்த பெண்கள் மயங்கச் செய்யும்
கள்ளை மழைபோலக் குற்றமில்லாத பொன் குடங்களில் நிறைய
வார்த்துத் தந்தார்கள். அவர்கள் பலமுறை வார்த்துத் தரத்தர வருத்தம்
போகும்படியாக நிறைய உண்டு இதுகாறும் இத்தகைய கள்ளைக் . குடிக்கவில்லை என்று
என் நெஞ்சில் இருந்த வருத்தம் போய்விட்டது அவ்வாறு மன நிறைவு பெறும்
படி கள்ளைஉண்டு அதனாலே மகிழ்ச்சியுடன் நின்றேன்.
இரவில் சுற்றத்துடன் கவலையின்றித்
தூங்கி எழுதல்
.................................................மற்று அவன்
திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி, 90
தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயன் எய்திய அளவை மான,
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து, 95
பொருள் : பிறகு செல்வம் நிறைந்த அவனுடைய அரண்மனையில் ஓரிடத்தில்
தங்கினேன். தவம் செய்யும் தவசிகள் தம்முடைய உடம்பை நிலத்திலே விட்டு மறையும்
மரணத்துக்கு முன்பு அந்த தவத்தின் பயனாக பேரின்பத்தை பெற்றது போல்
இருந்தது. வழி நடந்த துன்பம் முற்றும்போகும் படியாக செய்தான். அங்கே சுகமாக படுத்து
உறங்கினேன். பிறகு துயில் எழுந்தேன் உண்டான மெய் நடுக்கம் அல்லது வேறு
மனக்கவலையின்றி மயங்கி எழுந்தேன்
காலையில் அரசவைக்குச் செல்லுதல்
மாலை அன்னது ஓர் புன்மையும், காலைக்
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்,
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப,
கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட, 100
பொருள் : நான் அவனைக் காண்பதற்கு முன்னால், மாலைக் காலத்தில் என்னிடத்தில்
நின்ற சொல்லுக்கு எட்டாத வறுமையையும் அவனைக் கண்ட மறுநாள் காலத்தில்
என்னைக் கண்டவர் நேற்று வந்தவன் இவன் அல்ல என்று மயங்குவதற்குக் காரணமான
வண்டுகள் இடையறாதுமொய்க்கின்ற தன்மையையும் இது கனவோ என
மயங்கினேன். என் நெஞ்சம் நனவே என்று துணிந்து மகிழ்ந்து . வறுமையால்
உண்டாகிய வருத்தம் பொருந்திய மனம் மகிழ்ச்சி மிக அடைந்தது. அப்போது
அவனுக்குரிய புகழ்களை முற்றக் கற்று என் பின் நின்ற இளையர் அவற்றைச் சொல்லிக்
காட்டினார்கள்.
அரசனை அணுகுதல்
கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய்,
அதன் முறை கழிப்பிய பின்றை, பதன் அறிந்து,
பொருள் : இளைஞர்கள் கூறியவுடன் அவர்களை விரைவில் அழைத்து வாருங்கள் என்று
வாயில் காப்பவனிடம் கூறினான். எங்களைக் கண்டவுடன்அன்புடன் வாருங்கள் என்று
அழைத்தான். அவனைக் கண்ட பொழுது நாங்கள் செய்ய வேண்டியவற்றை முறைப்படி
செய்து முடித்தனர் .
உணவு கொடுத்து ஓம்பிய முறை
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை 105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ,
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க, 110
பொருள் : அருகம்புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறி ஆட்டுக்கிடாயின்
அழகினையுடைய வேகவைத்த பெரிய மேல் தொடையின் நெகிழ வெந்த புலாலை
உண்ணுங்கள் என பலமுறை வற்புறுத்தினான். இருப்புக் கோலில் சுட்ட கொழுப்பான
பெரிய தசைகளின் வெம்மையைவாயில் இடப் பக்கதிலும் வலப் பக்கத்திலும் சேர்த்து
ஆற்றித் தின்றோம். அவற்றை வேண்டாம் என்று நீக்கினால் சுவையை உடைய வேறு பல
உருவத்தில் உள்ள பல உணவுப்பொருள்களையும் பண்டங்களையும் தின்னும்படி தந்து
எங்களை இருக்கச் செய்தான். அந்த உணவுகளை உண்டமகிழ்ச்சியாலே, பண்கள் நன்கு
அமைந்த சிறிய யாழை ஒளி பொருந்திய நெற்றியை உடைய விறலியர்கள் மார்ச்சனை
அமைந்த முழவினது தாளத்துக்கு ஏற்ப ஆடினார்கள்.
மகிழ்ப் பதம் பல் நாள் கழிப்பி, ஒரு நாள்,
'அவிழ்ப் பதம் கொள்க' என்று இரப்ப, முகிழ்த் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை
புழுக்கல்,
பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப 115
அயின்ற காலை
பொருள் : அவ்வாறு மகிழ்ச்சியை உடைய கள்ளை உண்பதிலேயே பல
நாளைப் போக்கினோம் .இப்படி ஊனையே தின்று கொண்டிருந்த எங்களுக்கு ஒரு நாள்
சோறு ஆகிய உணவை ஏற்று உண்ணுங்கள் என்று அவன் வேண்டிக் கொண்டான்.
முல்லை மொட்டின் தன்மையுடைய முறியாத வரியற்ற விரலைப் போன்று தோன்றும்
நீண்ட ஒன்றோடு ஒன்று சேராத சோற்றையும் பிறகு பலகொட்டைகளைப் பொரித்து
அவற்றை கூட்டிப் பொரிக் கறிகளையும் கழுத்து வரையில் நிரம்பும் படி விழுங்கிய
வேளையில்;
………………….. பயின்று இனிது
இருந்து,
கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து,
பொருள் : இவ்வாறு உண்டு மகிழ்ச்சியோடு அவன் இடத்திலிருந்து போகாமல் இனிதாக
இருந்தேன் . அவன் எளிமையாகஇருந்தமையின் அவனோடு பலகால் பழகினோம்.
இவ்வாறு அவன் வழங்கிய ஊனைத் தின்று எம்முடைய பற்கள் கொல்லை நிலத்திலே
உழுதகொழுவின் முனை மழுங்கும் அதுபோல் பகலும் இரவும் இறைச்சியைத்
தின்று எங்கள் பற்களின் முனை மழுங்கி விட்டன. சற்று இளைப்பாறவும்
நேரமின்றி உண்டோம் . அதனால் அந்த உணவுகள் தெவிட்டி விட்டன உணவுகளை
வெறுத்தோம்.
ஊருக்குச் செல்லப் பரிசிலன்
விரும்புதல்
..................................ஒரு நாள்,
'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை
போகிய 120
செல்வ! சேறும், எம் தொல் பதிப்
பெயர்ந்து' என.
மெல்லெனக் கிளந்தனம் ஆக,
பொருள் : ஒருநாள் குற்றத்தைச் செய்து எழுந்த பகைவர்கள் தோல்வியுற்றுத் தந்த
திறைகளின் வகைகள் எல்லாம் முற்றுப்பெற்ற செல்வா என்று
கூறி நாங்கள் எங்கள் பழைய ஊருக்கு இங்கிருந்து புறப்பட்டுப் போவோம் என்று
சொன்னோம் அப்படி சொல்லும் போது அவனுடைய
அன்பில்
நெகிழ்ந்து போய் இருந்தமையால் அந்த
வார்த்தைகளை மெதுவாகச் சொன்னோம்.
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி
அனுப்புதல்
…………………………………………….'வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு?' என,
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு,
'துடி அடி அன்ன தூங்கு நடைக்
குழவியொடு 125
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என
தன் அறி அளவையின் தரத்தர, யானும்
என் அறி அளவையின் வேண்டுவ
முகந்துகொண்டு,
இன்மை தீர வந்தனென்.
பொருள் : அதைக் கேட்டு அவன் எம்முடைய கூட்டத்தை விட்டு பிரிந்து போகிறீர்களோ
என்று சொன்னான். அப்படிச் சொல்லும்போது கோபித்தவன் போல்
வருத்தமுடன் இருந்தான். அவனை பிரிவதில் எங்களுக்கு இருந்த வருத்தத்தை விட
அவனுக்கு அதிக வருத்தம் இருந்தது போல் இருந்தது. உடுக்கையின் பாகத்தைப் போன்ற
அடியால் அசைந்த நடையை கொண்ட யானைக் கன்றுகளுடனே பெண் யானைகளுடன்
சேர்ந்த ஆண்யானைகளை விரும்பியவற்றை ஏற்றுக் கொள்க என்று சொன்னான்.
பின்னும் ஊர்திகள் ஆடைகள் அணிகலன்கள் முதலியவற்றை தான் அறிந்தஅளவிலே
மேன்மேலே தந்தான் . ஆகவே யானும் எனக்கு வேண்டியவற்றை அறிந்த அளவிலே
வாங்கிக்கொண்டேன். அவனிடம் பெற்ற பொருள்களால் என்னுடைய வறுமை எல்லாம்
போயிற்று.
கரிகால் வளவனது சிறப்புக்கள்
...................................வென் வேல்
உருவப் பல் தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
பொருள் : அவன் பகைவர் இடத்தில் சீற்றம் கொள்பவன். அது முருகன் சீற்றம் போல்
இருக்கும் . பகைவர்கள் அஞ்சுவதற்குரிய தலைவன். அவன்தன் தந்தை இறந்து
போனமையால் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே அரசுரிமையைப் பெற்றான் .
அவனுடைய பெருமையை அறியாமல்அவனை எதிர்த்து தோல்வியுற்று பிறகு
அவனுடைய வலிமையை அறிந்து அவன் ஏவின தொழிலைச் செய்தார்கள். அவனுக்கு
ஏவல் செய்யாமல்நாம் பணிய மாட்டோம் என்று இருந்த பகைவர்
தேசத்திலுள்ளவர்கள் இவன் நம்மை என்ன செய்து விடுவானோ என்ற மனக்கவலை
பெருக இருந்தார்கள் . மிக்க வெம்மையை உடைய கதிரவன் ஆகிய செல்வன் கடலின்
மேல் பகலை செய்யும் தன் கிரகணங்களைப் பரப்பி வானத்திலே
சென்றார் போல அவன் தோற்றம் கொண்டவன். அவன் பிறந்து தவழத் தொடங்கிய நாள்
முதல் பல வகையாலும் சிறந்த நல்ல சோழநாட்டைதன் தோளில் ஏற்றிக்கொண்டு
நாள்தோறும் அதன் வளம் பெருகும் படியாகச் செய்தவன் .
வெண்ணிப் போர் வெற்றி
ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத்
தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்
பொருள் : யாழி எனும் நல்ல விலங்கினுடைய வருத்ததை செய்யும் குட்டி போலவும்
எமனை காட்டிலும் மிகுந்த வலிமையினால் பெருமை பெற்றுவிளங்குபவன் . யாழி
என்னும் மிருகம் குட்டியாக இருக்கும் போதே தன் தாய்ப் பாலை உண்ணும்
பருவத்திலேயே விரைவில் தானாகவே உண்ணவிரும்பி
வேட்டையாடத் தொடங்குகிறது. யானையைக் கொன்று விடும் வலிமை
இயற்கையிலேயே அதற்கு அமைந்திருக்கிறது. அதைப்போலவலிமையானவன் கரிகாலன் .
சேர சோழ பாண்டியரை பொருது வென்றான் . கரிய பனம் குருத்தில் அலர்ந்த வலப்
பக்கத்து ஓலையைஅடையாளமாக அணிந்தவன் சேரன். கரிய கொம்பினை உடைய
உடைய ரம்பத்தின்வாயைப் போன்ற விளிம்புடைய அழகிய தளிரால் செய்த
மாலையை அணிந்தவன் பாண்டியன். கரிய பனைமரத்தின் அது குருத்தோலையையும்
கரிய கிளைகளை உடைய ரம்பத்தின் வாயைப் போன்றவேப்பமரத்தின் அழகிய தளிரால்
செய்த மாலையையும் நிமிர்ந்து பெரிய தம் தலையில் மேலாக தோன்றும்படி
அணிந்தவன். சேர பாண்டியர்கள்ஆகிய இரண்டு பெரிய மன்னர்களும் ஒரு
போர்க்களத்தில் அழிந்து போகும்படி செய்தவன்.வெண்ணி என்ற இடத்தில் அமைந்த
போர்க்களத்தில் பகைவர்களை எதிர்த்து வென்றவன் . பகைவர்கள் அஞ்சுவதற்குரிய வலிய
முயற்சியை உடையவன் . கண் நிறைந்த அழகை உடைய ஆத்தி மாலையைச்
சூடியவன் கரிகால் வளவன் .
கரிகாலனது கொடையின் சிறப்பு
தாள் நிழல் மருங்கின் அணுகுபு
குறுகித்
தொழுது முன் நிற்குவிர் ஆயின்
பொருள் : அவன் திருவடி நிழலிடத்தை அணுகிச் சென்று அவன் திருவடியை தொழுது
வணங்கி அவன் முன்னே நீங்கள் நிற்க பொழுது அவனுடைய பார்வை உங்கள் மேல்படும்.
... .. ................................பழுது இன்று, 150
ஈற்று ஆ விருப்பின, போற்றுபு நோக்கி, நும்
கையது கேளா அளவை, ஒய்யென,
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னல் சிதாஅர் நீக்கி, தூய
கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி, 155
பொருள் : சிறிதும் குற்றம் இல்லாத பார்வையால் தன் கன்றுக்குப் பால் தரவேண்டும்
என்று கன்றை ஈன்ற பசுவைப் போல் உங்கள் தோற்றத்தை கண்டு அதனால் உங்கள்
வறுமையை உணர்ந்து கொண்டு அதைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
பார்ப்பான். கண்டவுடன் உங்கள் முன்கையில் உள்ள வாத்தியத்தின் ஒலியைக் கேட்கும்
முன்னே விரைவில் பாசியினுடைய வேரைப் போலே அழுக்கோடு குறைவு பெற்றுள்ள,
தையலை உடைய கந்தைத் துணியை நீக்கி தூய்மையான கரையிலே முடிச்சுகளை
உடைய பட்டாடைகளை வழங்குவான்.
'பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு
உண்க' என,
பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர,
வைகல் வைகல் கை கவி பருகி,
எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி, 160
பொருள் :பின்னர் அவன் உங்களுக்கு பருகுவதற்குக் கள்ளைத் தருவான். குங்குமப்பூவை
கலந்து மணம் வீசுகின்ற தெளிந்த கள்ளைப் பெறுவதற்குரிய பொற்கலத்தில் நீ
விரும்பியபடியே ஒவ் ஒன்றாக என்று வழங்குவான். நீங்கள் கையை கவித்து
வைத்துக்கொண்டு உண்ண உண்ணஅவன் மேலே மேலே வழங்குவான் அதை ஒவ்வொரு
நாளும் பருகுவீர்கள். நெருப்பில் தழைதத்தாற் போன்ற ஒருவன் செய்ததன்றி
இயற்கையானஇதழ்கள் இல்லாத பொற்றாமரையை உங்கள் கரிய
கடைக்குழன்ற மயிரிலே, அந்த மயிர் பொலிவு பெறும்படி சூட்டுவான்.
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய,
பொருள் : உங்களுடன் வரும் விறலியர்க்கும் அவன் பரிசில் தருவான் . நூலில் கட்டாத
நுண்மையும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள பொன்னரிமாலையை வெள்ளிதாகிய
ஒளியையுடைய விறலி சூடுவதற்காக வழங்குவான் .
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்க,
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி 165
பொருள் : யானை கொம்பால் செய்த , தாமரை மொட்டை போன்ற கொடுஞ்சி உடைய
தேரிலே வெள்ளை வெளேரென பால்போல குதிரைகள் பூட்டப்பட்டது. சாதிலிங்கம்
ஊட்டின தலைமையிர் பொங்கக் கழுத்தின் மயிர் அசையை இருந்த அத்தகைய
குதிரைகள் நான்கை அந்தத் தேரில் பூட்டிஉங்களை அனுப்பி வைப்பான் .
காலின் ஏழ் அடிப் பின் சென்று, 'கேலின்
தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு
பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு, நன் பல், 170
வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந்
தடக் கை,
வெருவரு செலவின், வெகுளி வேழம்
தரவிடைத் தங்கல் ஓவிலனே:
பொருள் : எங்களை வழியனுப்பும் போது தன் காலாலே ஏழடி உங்கள் பின்னாலே வந்து
அனுப்புவான். தேரை ஓட்டுபவர்கள் குதிரைகளை முடுக்கிஓட்டத் தாற்றுக்கோலை
வைத்திருப்பார்கள். ஆனால் இந்தக் குதிரைகள் இயல்பாகவே வேகமாக ஓடுவன. அதற்கு
மேல் வேகமாக ஓடினால்பொருநன் தாங்க மாட்டான் என்று கருதி, செலுத்துவதற்கு
இனிதாக அந்த தாற்றுக்கோலை கொடுக்காமல் நீக்கி விடுவான்.
அந்தத் தேரில் இவ்வாறு ஏறு என்று ஏற்றி விட்டு மற்ற யாழ்களை விட வீறு பெற்ற
யாழ்ப்பாணர்களுக்கு கொடுக்கும் பரிசில்களை உனக்குத் தருவான். அதுமட்டுமின்றி
உங்களுக்கு அவன் பல ஊர்களை உடைய நாடுகளையே வழங்குவான். அந்த ஊர்கள்
வளம் சிறந்தன. எப்போதும் நீர்வளம் பொருந்தியவை. அங்கே வாழ்வார்கள் தாம் எல்லா
வளங்களும் பெற்று வாழ்வதனால் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற
விருப்பமே அவர்களுக்கு இராது. நல்ல பல அஞ்சுவதற்கு காரணமான பறையை
அடிக்கும்படி செய்த பருத்த பெரிய வளைவாகிய அஞ்சுதற்குரிய நடையையும்
கோபத்தையும் உடையை யானைகளையும் வழங்குவான். இவ்வாறு பரிசில்களை அவன்
இடைவிடாது தந்து கொண்டே இருப்பான் தன் பால் வரும் பொருநர் பாணர் விறலியர்
ஆகியவர்களுக்கு இத்தகைய பரிசில்களை தருவதற்குக் கை ஓய மாட்டான்.
................................................வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென,
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின், பலபுலந்து, 175
நில்லா உலகத்து நிலைமை தூக்கி,
'செல்க' என விடுக்குவன் அல்லன்
பொருள் : நீங்கள் சென்றமையால் அவனிடம் பெற்ற அவற்றில் மிகுதியானவற்றை
உங்களைப்போல வந்த வேறு வேறு இரவலர்க்குநிரம்பக் கொடுப்பீர்கள்.
அவ்விடத்திலிருந்து சென்றுவிட முடிவு செய்வீர்கள் ஆகின் அதனை அவன் உணர்ந்து
கொள்வான். பலகால் பழகிய நண்பர்களைப் பிரிவது போன்ற வருத்தம் அவனுக்கு
உண்டாகும். அந்தப் பிரிவை பொறுக்காமல் அதற்கு காரணம் என்னவென்று தெரியாமல்
தன்னைத் தானே வெறுத்துக் கொள்வான் . நீங்கள் செல்வதற்கு அவன் எளிதில் விடை
கொடுக்க மாட்டான் . செல்வம் யாக்கை பதவி முதலியவை நிலை இல்லாதஉலகத்தில்
புகழ் நிலை பெறும் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பான். நீங்கள் போகலாம் எனக் கூறி
உங்களை உடனே விடுவான் அல்லன் அவன்.
சோழ நாட்டின் வளமும் வனப்பும்
.............................ஒல்லெனத்
திரை பிறழிய இரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை,
மா மாவின் வயின் வயின் நெல், 180
பொருள் : ஒல்லென்ற என்ற ஓசையோடு அலைகள் புரளும் கடற்கரை சூழ்ந்த அகன்ற
இடத்தையுடைய சோழநாடு. அங்கே மிகுதியாக நெல்விளைகிறது. அவற்றை குதிர்களில்
சேமித்து வைப்பார்கள் . அப்படி ஒவ்வொரு மா என்னும் அளவை கொண்ட இடங்கள்
தோறும் கூடு எனும்நெற்குதிர்கள் இருக்கும்.
(நெல்லைக் கொட்டி வைப்பதனால் அப்பெயர் வந்தது).
தாழ் தாழைத் தண் தண்டலை,
கூடு கெழீஇய, குடிவயினான்,
செஞ் சோற்ற பலி மாந்திய
கருங் காக்கை கவவு முனையின்,
மனை நொச்சி நிழல் ஆங்கண் 185
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவம்;
இளையோர் வண்டல் அயரவும்;
பொருள் : அங்கங்கே தென்னை மரங்கள் இருக்கும். தண்ணிய சோலைகள் விளங்கும்.
அங்கே குடி மக்கள் வாழ்கிறார்கள். அங்கே உதிரத்தோடு கலந்த சோற்றை காக்கைக்குப்
பலியாக இடுவார்கள். அவற்றை கரிய காக்கைகள்விழுங்கும். இவ்வாறு செஞ்சோற்றை
பலகாலும் உண்டமையினால் வேறு உணவு விரும்புகின்றன.மலைகளில் உள்ள நொச்சி
மரங்களின் நிழலில்குட்டியை ஈன்ற ஆமைகள் உள்ளன. அதை உண்டு அதனாலும்
வெறுப்பை அடைந்ததனால் பிறகு பசித்த காலத்தில் தின்னலாம் என்று பாதுகாத்து
வைக்கும். மருத நிலத்தில் உழவர்களின் சிறு பெண்கள் நெய்தல் நிலத்தில் உள்ள மணல்
குன்றில் வண்டல் இழைத்து விளையாடுகிறார்கள்.
……………………………………… முதியோர்
அவை புகு பொழுதில் தம் பகை முரண்
செலவும்
பொருள் : பலகாலமாக பகையில் முதிர்ந்தவர்கள் கரிகாலனுடைய
அரசவையினுள் போகும்போது தம்முடைய பகைமை வேறுபாடுகள் எல்லாம்
களைந்தவர்களாக இருப்பார்கள்.
முடக் காஞ்சிச் செம் மருதின்,
மடக் கண்ண மயில் ஆல, 19
பைம் பாகற் பழம், துணரி
செஞ் சுளைய கனி, மாந்தி;
அறைக் கரும்பின் அரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக,
வறள் அடும்பின் இவர் பகன்றைத் 195
தளிர்ப் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின், அகன்று மாறி,
அவிழ் தளவின் அகன் தோன்றி,
நகு முல்லை, உகு தேறு வீ, 200
பொன் கொன்றை, மணிக் காயா,
நல் புறவின் நடை முனையின்,
சுற வழங்கும் இரும் பெளவத்து
இறவு அருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின், 205
ஓங்கு திரை ஒலி வெரீஇ,
தீம் பெண்ணை மடல் சேப்பவும்;
கோள் தெங்கின், குலை வாழை,
கொழுங் காந்தள், மலர் நாகத்து,
துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து, 210
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப,
கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவு எக்கர்ப் பல பெயர்;
பொருள் : சோழ நாட்டில் மயில்கள் பல உள்ளன. பசிய பாகற் பழத்தையும் சிவந்த
சடையை உடையனவாகிய பழா பழத்தையும் தின்று ,வளைந்து வளர்ந்த காஞ்சிமரத்திலும்
செவ்விய மருதமரம் அந்த மயில்கள் தங்கி தம்முடைய பெடை மயில்
ஆரவாரித்து அழைக்கும்படியாக அங்குநின்றும் போகின்றன. கரும்பை அறுக்கும் பொழுதும்
நெல்லை அறியும் பொழுதும் களத்தில் உள்ளவர்கள் ஊக்கத்தோடு ஆரவாரம் செய்து
கொண்டேதம் செயலை செய்கிறார்கள். நீரற்ற வறண்ட இடத்திலும் அடுப்பம் கொடி
படர்ந்து இருக்கிறது. தளிர்கள் நிரம்பிய புன்னை மரங்கள் உள்ளன.
அவ்வளவு மரங்களையும் கொடிகளையும் உடையதாக உள்ள அந்த சோலை தாழ்ந்து
இருக்கிறது. ஞாழல் என்னும் மரங்கள் அரும்புகளுடன் நிற்கின்றன. இப்படிப் பலவகை
மரங்கள் சூழ்ந்து சோழநாடு.அந்த இடத்தில் சில காலம் தங்கி சலிப்பு ஏற்பட்டால்
அங்கிருந்து நீங்கி மாறுகின்றன.
முல்லை நிலத்தில் தளவு என்ற முல்லை படர்ந்திருக்கிறது. அந்தத் தளவையும் பரந்த
தோன்றியையும் அலர்கின்ற முல்லையையும் பூ உகுகின்ற பொன் போன்ற பூவினை
உடைய கொன்றையையும் நீலமணி போன்ற பூவினை உடைய காயாவையும் உடைய
நல்ல காட்டில் சிலகாலம் உறைவர். பிறகு சலித்துவிட்டால் மருத
நிலத்திற்குச் செல்வார்கள். அங்குள்ள காட்சிகளையும் அங்கு உள்ளவர் ஒழுக்கத்தையும்
புகழ்வார்கள் . பிறகும்அங்கும் சலிப்பு ஏற்படும்.சுறா மீன்கள் உலாவுகின்ற விரிந்த கடலில்
உள்ள இரு மீன்களை உண்ட கூட்டமாகிய நாரைகள் பூக்கள் நிரம்பிய புன்னை
மரத்தின் கிளையில் தங்கினால் ஓங்கி வீசும் கடல் அலையின் ஓசைக்குப் பயந்து இனிய
பனைமரத்தின் மடல்களில் தங்கும். குலை குலையாக காய்த்த தென்னை மரங்களின்
காய்களையும் வாழையையும் கொழுவிய காந்தளையும் மலர்ந்த சுரபுன்னையையும்
உடுக்கையின்ஒலி போன்ற ஓசையை உடைய பேராந்தையையும் உடைய குறிஞ்சி
குறிஞ்சி நிலத்துக்கு சென்று அவ்விடத்தை புகழ்கிறார்கள்குறிஞ்சி நிலத்தில் வண்டுகள்
யாழைப் போல முரல்கின்றன . அந்த பாட்டுக்கு ஏற்ப தன் கலாவத்தை விரித்த
மயில்கள் நிலவு போன்ற நிறமுடைய மணல் மேட்டில் பலவாக பெயர்ந்து செல்கின்றன.
நில மயக்கமும் நல் ஆட்சியும்
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்; 215
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்;
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங் கண்ணி குறவர் சூட;
கானவர் மருதம் பாட, அகவர் 220
நீல் நிற முல்லைப் பல் திணை நுவல;
கானக் கோழி கதிர் குத்த,
மனைக் கோழி தினைக் கவர;
வரை மந்தி கழி மூழ்க,
கழி நாரை வரை இறுப்ப; 225
தண் வைப்பின் நால் நாடு குழீஇ,
மண் மருங்கினான் மறு இன்றி,
ஒரு குடையான் ஒன்று கூற,
பெரிது ஆண்ட பெருங் கேண்மை,
அறனொடு புணரந்த திறன் அறி செங்கோல், 230
அன்னோன் வாழி, வென் வேல்
குருசில்!
பொருள் :அங்கே தேனையும் கிழங்கையும் கொண்டுபோய் விற்கிறார்கள். அதற்குப்
பதிலாக மீன் நெய்யையும் நறவையும் வாங்கிச் செல்கிறார்கள். இனிய கரும்புகளையும்
அவலையும் கூறுபடுத்தி விற்கிறார்கள். சிலர் அவற்றுக்குப் பதிலாக மான் தசையோடு
கள்ளையும் வாங்கிக்கொண்டுசெல்கிறார்கள். குறிஞ்சி நிலத்தில் உள்ளவர்கள்
மிகுதியாகப் பாடுவது குறிஞ்சிப்பண். அந்த குறிஞ்சியை நெய்தல் நிலத்தில் உள்ள பரதவர்
பாடுகின்றனர் . நெய்தல் நிலத்துக்குரியது நெய்தல் பூ . அதனுடைய மணமுள்ள
கண்ணியை மலை வாழ் குறவர்கள் சூடுகிறார்கள் . முல்லைநிலமாகிய காட்டில்
உள்ளவர்கள் மருத நிலத்திற்குரிய மருதப் பண்ணைப் பாடுகிறார்கள். மருத நிலத்தில்
உள்ள பாட்டுக்காரர்கள் நீலநிறம்பொருந்திய முல்லை நிலத்துக்குரிய
பலவகைப் பாடல்களைப் பாடுகிறார்கள். முல்லை நிலத்தில் உள்ள கோழிகள் மருத
நிலத்தில் உள்ள நெற்கதிர்களைத் தின்னுகின்றன . மருத நிலத்தில் வீடுகளில் உள்ள
கோழிகள் மலையில் விளையும் தினையையும் தின்னுகின்றன . மலை இடத்தில்
வாழும் மந்திகள் நெய்தல் நிலத்துக் கழியில் மூழ்கிக் கிடக்கின்றன . கழியில் திரியும்
நாரைகள் மலையிலே கிடைக்கின்றன. இவ்வாறு குளிர்ந்த
குறிஞ்சி முதலாகிய நான்கு கூறாகிய நாடுகள் திரண்ட இடம் சோழ வளநாடு .
உலகத்தில் உள்ளவர்கள் கரிகாலனை புகழ்கிறார்கள் அப்படி உலகத்தை குற்றமின்றி
பாதுகாப்பவன். அவன் தன்னுடைய குடை ஒன்றுமே எங்கும் பரவ யாவரும் காவலன்
உடைய ஆணை ஒன்றையே கூற பெருமையுடன் ஆட்சிபுரிந்து மிக்க அன்பையும்
தருமத்தோடு சேர்ந்து ஆட்சித் திறத்தை அறிந்த செங்கோலையும் உடைய கரிகால்
வளவன் வெல்லுகின்ற வேற் படையை உடையவன்.
காவிரியின் வெள்ளச் சிறப்பு
மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக் 235
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்,
துறைதுறைதோறும், பொறை உயர்த்து ஒழுகி,
பொருள் : பகை மன்னர்களெல்லாம் நடுங்கும் படியாகத் தோன்றி மாட்சிமைப்பட்ட
விளக்கம் தரும் நல்ல கிரணங்களைப் பரப்பி குல்லை செடிகள்கருகுகின்றன மரங்களின்
கொம்புகள் தீப்பற்றி எரிகின்றன . பெருமையை உடைய மலைகளில் இருந்து விழும்
அருவிகள் எல்லாம் வறண்டுபோயின அன்றியும் கூட்டமாகிய மேகங்கள் கடலில் உள்ள
தண்ணீரை முகக்க மறந்துவிட்டன. இவ்வாறு மிகப்பெரிய பஞ்சம் உண்டாகி நற்குணம்
இல்லாத பொல்லாத காலத்திலும் காவிரி தன் வளம் குன்றுவது இல்லை. இப்படிப் பெரிய
பெரிய பஞ்சம் உண்டாகி நற்பண்புகள் யாவும் இல்லாமல்போன காலத்திலும் காவிரி
நலம் செய்கிறது. இத்தகைய பஞ்ச காலத்திலும் காவிரி கொடியும் நரந்த புல்லும் அகிலும்
சந்தனமும்ஆகியசுமையைத் துறைதோறும் துறைதோறும்
இளைப்பாரத் தள்ளிப்போகிறது.
காவிரி நாட்டு வயல் வளம்
நுரைத் தலைக்குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும், 240
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக்
கிடக்கும், 245
சாலி நெல்லின், சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.
பொருள் :புது வெள்ளம் நுரையுடன் வருகிறது . ஆரவாரத்தோடு ஓடுகிறது.
குளத்திலும் கோட்டகம் என்ற மடுக்களிலும் புகுந்து ஓடுகின்றது.
ஆற்றில் நீர் வந்தமையால் மகளிர் வேகமாக குதித்து மூழ்கி
விளையாடுகிறார்கள். இவ்வாறு வந்த வெள்ளத்தினால் நெல் நன்றாக விளைகிறது.
அதை அறுவடை செய்கிறார்கள். நெற் கதிர் முற்றிச் சாய்ந்து இருத்தலின் அவற்றை
அறுப்பவர்கள் வளைந்து நின்று அரிவாளின் வயலே நெல்லை
அறுக்கிறார்கள் . நெல் அறுவடையான பிறகு அவற்றைத் திரட்டி மூட்டைகளில்
அடுக்குகிறார்கள். அறிந்த சூட்டை மலைபோல்
அடுக்குகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் அறுத்த நெற் கதிர்களை வெற்றிடம் இல்லை ஆகும்படி
அடுக்குகிறார்கள். நெல்லின் விளைவு ஒரு
வேலிக்கு ஆயிரக்
கலமாக இருக்கிறது. அவ்வாறு உண்டாகும் வளம் காவிரியால் ஆகியது. அந்த
காவிரியால் புரக்கப்படும் நாட்டுக்கு உரியவன் கரிகாலன். நெல்லின் வரம்பு கட்டின வேலி
நிலம் ஆயிரம் கலம் விளைவை உடையதாகச் செய்து காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே
உரிய தன்மையைஉடையவன் கரிகால்வளவன்.
தனிப் பாடல்கள்
ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின்,
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு. 1
அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமாவளவன் எனத் தேறேன்; -திரு மார்பின்
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்
போனவா பெய்த வளை! 2
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று. 3
கருத்துகள்
கருத்துரையிடுக