திருக்குறள்- நீத்தார் பெருமை - 21-30
திருக்குறள்- நீத்தார் பெருமை - 21-30
21. ஒழுக்கத்து
நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும்- பனுவல் துணிவு.
பொருள் : ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப்
போற்றிக் கூறுவதே
நூல்களின் துணிவாகும்.
22. துறந்தார்
பெருமை துணைக் கூறின், வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.
பொருள் : பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில்
இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.
23. இருமை
வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று, உலகு.
பொருள் : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை
ஆராய்ந்தறிந்து அறத்தை
மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.
24. உரன்
என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.
பொருள் :அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க
வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
25. ஐந்து
அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும், கரி.
பொருள் : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு,
வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
26. செயற்கு
அரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்.
பொருள் : செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர்.
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
27. சுவை, ஒளி, ஊறு,
ஓசை, நாற்றம்
என்று ஐந்தின்
வகை தெரிவான்கட்டே-உலகு.
பொருள் : சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும்
ஆராய்ந்து அறிய
வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
28. நிறைமொழி
மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்.
பொருள் : பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில்
அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
29. குணம்
என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும், காத்தல் அரிது.
பொருள் : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே
சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
30. அந்தணர்
என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும்
செந் தண்மை பூண்டு ஒழுகலான்.
பொருள் : எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால்
அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக