எட்டுத்தொகை நூல்கள் - இலக்கிய வரலாறு

 

                எட்டுத்தொகை நூல்கள்இலக்கிய வரலாறு

எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3)

இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவற்றுள்,

 

அகம் சார்ந்தன

நற்றிணை

குறுந்தொகை

அகநானூறு

ஐங்குறுநூறு

கலித்தொகை    

புறம் சார்ந்தன

 புறநானூறு

 பதிற்றுப்பத்து.

அகமும் புறமும் கலந்தது

  பரிபாடல் மட்டுமே.

 

நற்றிணை

 

அகநானூறு போல் மிக நீண்டனவாகவும் குறுந்தொகை போல் மிகச்

சிறியனவாகவும் அமையாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட அளவினதான

400 அகவல்கள் நற்றிணை என்ற தொகுப்பில் உள்ளன. இதன் அடியளவு 9

முதல் 12 அடிகள். இதில் 110379 ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆகிய

இரண்டும் 13 அடிகள் கொண்டவை. இந்த நூலுக்கு அமைந்த திருமால்

வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.

நற்றிணையில் உள்ள பாடல்களை இயற்றிய புலவர்கள் நூற்று

எழுபத்தைவர். 56 பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை.

இதனைத் தொகுத்த புலவர் பெயரும் தெரியவில்லை. தொகுத்தவன்

பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி.

செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி

வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின்

உதவியை எதிர்பாராமல்எளிய உணவை வேளை தவறி உண்டு

வாழ்கிறாள்.

கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)

 

என்ற பகுதி இதனைக் காட்டுகிறது.

 

குறுந்தொகை

 

குறுகிய அடிகளால் ஆன 400 ஆசிரியப்பாக்களால் ஆன நூல் குறுந்தொகை

ஆயிற்று. இதில் நாலடி முதல் எட்டடி வரை அமைந்த பாடல்கள் இடம்

பெற்றுள்ளன. இதனை இயற்றியோர் 205 புலவர்கள். இதற்குக் கடவுள்

வாழ்த்து பாடியவர்  பாரதம் பாடிய பெருந்தேவனார். இது முருகவேள்

வணக்கமாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர்.

தொகுப்பித்தார் பெயர் தெரியவவில்லை. இதன் 235 பாடல்கள் பல்வேறு

உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

இயற்பெயரான் அன்றிச் சிறப்புப் பெயரால் அறியப்பட்ட புலவர் பலர் இதில்

இடம் பெறுவர். அணிலாடு முன்றிலார்குப்பைக்கோழியார்விட்ட

குதிரையார் என்பவை அவற்றுள் சில. தாம் பாடிய பாடல்களில் இடம்

பெற்ற அழகிய தொடரே இப்பெயர்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

காதல் வாழ்வின் பல்வேறு சிறப்புகளும் இந்நூலில் சுவைபடக்

கூறப்பட்டுள்ளன.

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49)

 

என்ற பகுதிகாதலின் அமரத் தன்மைக்குச் சான்றாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே (3)

என்ற பகுதியால் காதலின் ஆழமும்விரிவும்உயர்ச்சியும்

உணர்த்தப்படுகின்றன.

ஐங்குறுநூறு

 

இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளும்

உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை. இந்நூல் 500

குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள்

உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர். ஒவ்வொரு

நூறும் பத்துப் பத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு

பெயர் பெறுவது சிறப்பு.

இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து

இயற்றியுள்ளார். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய

கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல்

இரும்பொறை என்பவர். இதன் 129130 ஆம் செய்யுட்கள் கிட்டவில்லை.

இதில் மருதம்நெய்தல்குறிஞ்சிபாலைமுல்லை என்ற முறையில்

திணைகள் கோக்கப்பட்டுள்ளன. இதற்குச் சுருக்கமான பழைய உரை

கிடைத்துள்ளது.

இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:

மருதம்- ஓரம்போகியார்

நெய்தல்- அம்மூவனார்

குறிஞ்சி- கபிலர்

பாலை- ஓதலாந்தையார்

முல்லை- பேயனார்

இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி அந்தாதியாகவுள்ளது..ஒரு

குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும் போக்கை இந்நூலில் மட்டுமே

காண முடியும். ‘வாழி ஆதன் வாழி அவினி!’ என்ற அடி பாடல்தோறும்

இடம் பெறலை வேட்கைப் பத்தில் காண்க.

நாட்டில் பசியும் பிணியும்வறுமையும்அறமற்ற செயல்களும் இல்லாது

ஒழியவும்அன்பும் அறமும்ஒழுக்கமும்செல்வ வளமும் பெருகவேண்டும்

என வேண்டும் பெண்களை இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.

அகநானூறு

இது 13 அடிச்  சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும் உடைய 400

பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது. பாரதம் பாடிய

பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். இதற்கு நெடுந்தொகை

என்ற பெயரும் உண்டு. இது

 களிற்று யானை நிரை (1-120)

மணிமிடை பவளம் (121-300)

நித்திலக்கோவை (301 - 400) என்று மூன்று தொகுதிகளாக உள்ளது.

தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை விட வேறுபட்டுள்ளது. பாட்டின்

எண் கொண்டு அதன் திணையைச் சொல்லும் வகையில் இவை

கோக்கப்பட்டுள்ளன. ஒற்றைப்படை எண்  பாலைக்கு உரியன. 28 என்ற

எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன

முல்லைக்கும்6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும்1020 என்றவாறு

முடிவன நெய்தலுக்கும் உரியன. மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு

இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175

புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர் பெயர்

தெரியவில்லை.

 

மக்கட்பேற்றின் சிறப்பினை,

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறுவின்று எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர்             (66)

 

என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.

தமிழர் திருமணமுறை பற்றி இந்நூலின் 86136 ஆகிய செய்யுட்கள்

விரிவாகக் கூறுகின்றன.

கலித்தொகை

   கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள் கொண்டது

இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால்

சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது நினையத்தக்கது.

பிற்காலத்து வெண்பாவொன்றுஇதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய

புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படிபாடியோரும் அவர் பாடிய

திணையும் பின்வருமாறு அமையும்.

பாலை- பாலை பாடிய பெருங்கடுங்கோ

குறிஞ்சி- கபிலர்

மருதம்- மருதன் இளநாகனார்

முல்லை- சோழன் நல்லுருத்திரன்

நெய்தல்- நல்லந்துவனார்

இருக்கின்ற ஒரே ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை

நிலையிலும்மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற

வாழ்க்கை என்பதை ஒரு புலவர் பின்வருமாறு பாடுகிறார்.

ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை !     (18)

  புறநானூறு

      புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது புறநானூறு.

இதனைத் தொகுத்தாரும்தொகுப்பித்தாரும் யாவர் எனத் தெரியவில்லை.

267268 ஆகிய இரு செய்யுட்களும் அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப் பின்னர்

வரும் செய்யுள்களில் சிதைவுகள் உள்ளன. இதற்கு கடவுள் வாழ்த்து

செய்யுள் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பல பாடல்களை

இயற்றியோர் பெயர் தெரியவில்லை. இதனை நமக்குத் தேடித் தந்தவர்

தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார்.

சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தர்கள்பாரிகாரிஓரி,

பேகன்ஆய்அதியமான்நள்ளி என்னும் கடையெழு வள்ளல்கள் முதலிய

பலருடைய போர் வெற்றிகள்கொடைவண்மை ஆகியவற்றை இந்நூல்

விளக்கமாகத் தருகின்றது..

கணவனை இழந்த பெண்டிர் தம் கூந்தலையும்வளையலையும்பிற

அணிகளையும் களைதல்உடன்கட்டை ஏறி உயிர்விடல்இறந்தாரைத்

தாழியில் இட்டுப் புதைத்தல்தீ மூட்டி எரித்தல்வீரர்கட்கு நடுகல் நட்டு

வழிபடல்நோய் கொண்டு இறந்த அரச குடும்பத்தார் உடலை வாளால்

கீறிப் புதைத்தல்கணவனை இழந்த பெண்டிர் கைம்மை நோன்பு

மேற்கொள்ளுதல் முதலான தமிழர் பண்பாட்டு நிலைகளை இந்நூல் காட்டி

நிற்கின்றது.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (18)

 

பதிற்றுப் பத்து

 

பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச்

செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன்

முதற்பத்தும்இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80 செய்யுட்களே.

இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார் எனத் தெரியவில்லை.

இதற்குப் பழைய உரையொன்று உண்டு.

இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன்

முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இது,

பாடிய புலவர்பாடப்பட்ட மன்னன்அவன் பெற்றோர்செய்த

 

அருஞ்செயல்கள்ஆண்ட கால அளவுபாட்டுகளின் பெயர்கள்புலவர்

பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகளைத் தருகின்றது.

முதற் பத்து-கிடைக்கவில்லை

இரண்டாம் பத்து

பாடப்பட்டவன் - இமயவரம்பன்நெடுஞ்சேரலாதன்

பாடியவர் -குமட்டூர்க்கண்ணனார்

மூன்றாம் பத்து

          பாடப்பட்டவன்   -   பல்யானைச்செல்கெழுகுட்டுவன்

பாடியவர்- பாலைக்கௌதமனார்

நான்காம் பத்து

பாடப்பட்டவன்- களங்காய்க்கண்ணிநார்முடிச்சேரல்

பாடியவர் -காப்பியாற்றுக்காப்பியனார்

ஐந்தாம் பத்து

பாடப்பட்டவன்- கடல்பிறக்கோட்டியசெங்குட்டுவன்

பாடியவர் -பரணர்

ஆறாம் பத்து

பாடப்பட்டவன்- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

பாடியவர்- காக்கை பாடினியார் நச்செள்ளையார்

ஏழாம் பத்து

பாடப்பட்டவன்- செல்வக் கடுங்கோவாழியாதன்

பாடியவர்- கபிலர்

எட்டாம் பத்து

பாடப்பட்டவன்- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

பாடியவர் -அரிசில் கிழார்

ஒன்பதாம் பத்து

பாடப்பட்டவன் -இளஞ்சேரல் இரும்பொறை

பாடியவர்- பெருங்குன்றூர் கிழார்

பத்தாம் பத்து- கிடைக்கவில்லை

 

இந்நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுட்கும்அதிலுள்ள ஒரு அழகிய

தொடரால் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அருவியாம்பல்தசும்பு

துளங்கு இருக்கைபிறழ நோக்கு இயவர் என்பன அவற்றுள் சில.

ஒவ்வொரு பாட்டுக்கும் திணைதுறைவண்ணம்தூக்கு என்பன

காணப்படுகின்றன. இவை இசையுடன் பாடப்பட்டன போலும். இதன்

நான்காம்பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்மக்கள் வேண்டி வேள்வி செய்தல் உண்டு என்பதனை இந்நூலால்

அறிகின்றோம். அந்தணரின் ஆறு கடமைகள் இன்னின்னவென்று ஒரு

செய்யுள் (24) கூறுகின்றது. அறநெறிப்படி ஆளப்படும் அரசுக்குத் தடையாக

அமைவன இன்னவை என இந்நூல் கூறுகின்றது. அதனைக் காண்க:-

சினனே காமம் கழிகண்ணோட்டம்

அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை

தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து

அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும்      (22)

 

பரிபாடல்

 

எட்டுத்தொகை நூல்களுள் அகமும்புறமும் கலந்து அமைந்த நூல்

பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில்,

திருமால்முருகன்கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும்மதுரை நகர்

பற்றியும்வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள்

இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த

உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள்

கிடைத்துள்ளன.

இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

இதிலுள்ள பாடல்களை இயற்றியோர் பதின்மூவர். இவற்றுக்கு இசை

வல்லுநர்களைக் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியர்

பெயருடன்இசை வகுத்தவர் பெயரும்பண்ணின் பெயரும் ஒவ்வொரு

பாடலுக்கும் கீழ் தரப்பட்டுள்ளன. கண்ணகனார் முதல் மருத்துவன்

நல்லச்சுதனார் ஈறாகப் பத்து இசையறிஞர்கள் பண் வகுத்துள்ளனர்.

இதில் திருமால் பற்றியனவும்முருகன் பற்றியனவுமான புராணச்

செய்திகள் மிகுதி. மேலும்புதிய இலக்கணக் கூறுகளும்புதிய

சொல்லாட்சியும்வடசொற் கலப்பும் மிகுந்து காணப்படுகின்றன.

முருகப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச்

செய்திகளும்வையையில் நீராடுவாரின் பல்வேறு செயற்பாடுகளும்

சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன. இசைகூத்து ஆகிய கலைகள்

பற்றிய நுட்பமான செய்திகள் இதில் உண்டு. திருப்பரங்குன்றத்தில் ஓவிய

மண்டபம் இருந்த செய்தியை அறியலாம்.

பிற உயிர்களைக் கொல்வோர்வெகுளி உடையோர்அறநெறியைப்

பின்பற்றாதார்கூடா ஒழுக்கம் கொண்டோர்மறுமையை நம்பாதோர்

ஆகியோர் முருகன் அருள் பெற மாட்டார்கள் என்று ஒரு பாட்டுக்

கூறுகின்றது. (5 : 73-77)

முருகப்பெருமானிடம் பொன்னும் பொருளும் போகமும் வேண்டாமல்,

அருளும் அன்பும் அறனும் வேண்டும் அன்பர்களையும் இந்நூலில்

காணலாம்.

- யாம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே (5 : 78-81)

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்