நற்றிணை 5 நிலம் நீர் ஆரக்
நற்றிணை 5
பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்
திணை : குறிஞ்சித் திணை
கூற்று : தலைவன் செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைவிக்கு
தோழி
சொன்னது
நிலம் நீர் ஆரக், குன்றம் குழைப்ப,
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்பக்,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல் இன்று செல்
இகுளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே.
பொருள்:
தோழி ,நிலம் நீரால் நிரம்பப் பெறவும் மலை மேல் உள்ள மரம்
முதலாயின தழைக்கவும் அகன்ற இடத்தை உடைய குளிர்ந்த சுனையில்
நீர் நிறைந்துஅங்குள்ள பயிர்கள் நெருங்கி வளரவும் ,குறவர் வெட்டி
அழித்தலால் குறைபட்டநறைக் கொடிகள் நறுமணம் கமழும் சந்தன
மரத்தின் மீது சுற்றிப் படரவும்மேகம் பெரிய மழை பொழிதல் ஆகிய
தொழிலைச் செய்தது. அம்மேகம் தென்திசை கண் எழுந்து
செல்லுதலால் பிரிந்தோர் வருந்தும் முன்பனிக்காலத்திலும் காதலரைப்
பிரிந்து வாழ்தல் அரியதாகும். இன்று பிரிந்து செல்லும்தோழியரை ,
வாடைக்காற்று செல்லாது கூட்டுகின்றது . இந்நிலையில்
வருந்தியகண்ணீர் வடிக்கும் என் கண்கள் அவர் பிரிந்து செல்லாதவாறு
ஒரு குறிப்பு உணர்த்துவதை அனுப்பிவைத்தன. ஆதலின் அவர் பிரியார் .
கருத்துகள்
கருத்துரையிடுக