நற்றிணை 14 தொல் கவின் தொலைய

 

 

       நற்றிணை 14  தொல் கவின் தொலைய

பாடியவர் : மாமூலனார்

திணை    :  பாலைத் திணை

கூற்று    : இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது

பாடல்

தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,

நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;

நட்டனர்  வாழி! தோழி! குட்டுவன்

அகப்பா அழிய நூறி, செம்பியன்

பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது   5

அலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்து

மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,

இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,

துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்

நெடு வரை விடரகத்து இயம்பும்    10

கடு மான் புல்லிய காடு இறந்தோரே.

பொருள் : தோழி, தலை கவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தள் மலரை உடைய சாரலில்

இனத்தோடு சேர்ந்து வலிமைமிக்க ஆண் யானை பெரிய பாம்பின் வாய்ப்பட அதனால்

அடங்காத துயரத்தோடு அச்சமும் கொண்ட பெண் யானை பேரொலி எழுப்பிப்  பிளிறும்.

அப்பெரும் ஓசை வேகமாகச் செல்லும் குதிரையை உடைய புல்லி என்பான் காட்டில்   

கேட்கும் . அக்காட்டின் கண்ணே சென்ற நம் காதலர் என் தோளின் அழகு கெட்டு வாடி

பழைய நலமெல்லாம் தொலையுமாறு  இன்பம் தராது  என்னை கைவிட்டு சென்றார் என

நீ கூறினாய். சேரனுடைய மதில் அழியுமாறு இடித்துச் சோழவேந்தன் ஒரு பகலில்

அவ்வூரைத் தீக்கு இரையாக்கியதைக் காட்டிலும் பெரிய பழி உண்டாகச் சென்றார்.

அவ்வாறு கைவிட்டுச் சென்றார் ஆயினும் என்பால் நட்பு வைத்தவர் அவர். ஆதலால்

குறித்த பருவத்தில் வந்து என்னிடத்து அன்பு செய்வர்.  எனவே அவர் நீடுவாழ்வாராக.

 

கூற்று விளக்கம் : அறத்தொடு நிற்றலில் முதலில் தலைவன் பிரிந்தமை காரணமாகத்

தலைவி தலைவன் தன்னை கைவிட்டான்  என வருந்தி புலம்பினாள். இதனைக் கேட்ட

தோழி தலைவன் நம்மை கைவிட்டான் ஆயின் அவன் இயல்பு அத்தகையது என்று

கூறினாள்.  அது கேட்ட தலைவி அவ்வாறு அவர் கைவிட்டார் ஆயினும் குறித்த

பருவத்தில் வந்து அன்பு செய்வார் என்று தலைவனின் நல்ல இயல்புகளை கூறினாள்

என்பது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்