நற்றிணை 12. விளம்பழம் கமழும்

 

 

                  நற்றிணை - 12. விளம்பழம் கமழும்

பாடியவர் : கயமனார்

திணை : பாலை

கூற்று : தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.

கூற்று விளக்கம் தலைமகனோடு தலைமகள் செல்ல தோழி உடன்படுத்தினாள்.  செவிலி

இடம் சென்று அறத்தொடும்  நின்றாள் . பின்பு தலை மகளிடம் உடன்போக்கு இப்போது

வேண்டாம் என நிறுத்தினாள்.  நிறுத்தியபின் தலைவனிடம் சென்று தலைவி நின்னோடு வர

உடன்பட்டாள் ஆனால் சிலம்பு முதலியவற்றை கழற்றி வைக்கும்போது தன் தோழியர்

வருத்தப்படக்கூடுமே என வருந்தினாள் என்று கூறி அச் செலவைத் தவிர்த்தாள் . செலவு

தவிர்த்தமைக்கு காரணம் திருமணத்திற்கு முயல்க என அறிவுறுத்துவது ஆகும்.

பாடல் :

விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்

பாசம் தின்ற தேய் கால் மத்தம்

நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்

வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்

அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் 5

வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,

'இவை காண்தோறும் நோவர்மாதோ;

அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என

நும்மொடு வரவு தான் அயரவும்,

தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே

பொருள்: தயிர்ப் பானையில் முடை நாற்றம் தீர விளாம்பழத்தை விட்டு வைத்துள்ளனர் அதன்

மணம் கமழ்கிறது . அத்தகைய   தயிர்ப் பானைக் கயிறு ஆடித் தேய்த்தலால் மத்தின் தண்டு

தேய்ந்து இருக்கிறது. வெண்ணை தோன்ற கடைதலால் தறியடியில் ஓசை  முழங்கும்.

அத்தகைய நிகழ்ச்சி நடக்கும் தங்கிய இருள் தீரும் வைகறைப் பொழுதில் தன் உடம்பு

பிறருக்கு தெரியாதபடி மறைத்து தன் காலில் அணியும் பருக்கைக் கற்கள் போட்டு நிரப்ப

பெற்ற சிலம்பை கழற்றினாள். சிலம்பை  சிறப்பையுடைய வரிந்து புனைந்த பந்தோடு ஒருசேர

வைக்கச் சென்றாள். அப்போது அவள் உள்ளத்தில் என் தோழிமார் இவற்றைக்

காணும்போதெல்லாம் வருந்துவார்கள்.  அவர்கள் இரங்கத் தக்கவர்கள் அல்லவா என்று

கருதினாள் . அதனால் உன்னோடு வருதலை அவள் மேற்கொண்டிருந்த நிலையில் அவள்

கண்கள் அளவுக்கும் அடங்காமல் கண்ணீர் சிந்துகின்றன .ஆதலால் உமக்கு ஏற்றவாறு

செய்யுங்கள் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்