கலித்தொகை 11 அரிது ஆய அறன் எய்தி
கலித்தொகை 11 அரிது ஆய அறன் எய்தி
பாடியவர் :பாலை பாடிய
பெருங்கடுங்கோ,
திணை :பாலை,
கூற்று : தலைவி
‘அரிது
ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ எனப்
பிரிவு எண்ணிப் பொருள்வயின் சென்ற நம் காதலர்
வருவர் கொல் வயங்கிழாஅய்! வலிப்பல் யான், கேஎள் இனி! 5
“அடி
தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாஅய் காடு” என்றார்; “அக்காட்டுள்
துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின் நீரைப்
பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு” எனவும்
உரைத்தனரே;
“இன்பத்தின்
இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் 10
துன்புறூஉம் தகையவே காடு” என்றார்; “அக்காட்டுள்
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவு” எனவும் உரைத்தனரே;
“கல்
மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடு” என்றார்; “அக்காட்டுள் 15
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை” எனவும் உரைத்தனரே;
என ஆங்கு, இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின் 20
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல் எழில் உண்கண்ணும் ஆடுமால் இடனே.
பொருள்:
அறம் செய்யும் பேறு பெறுவது
அரிது. அந்தப் பேற்றினைப் பெற்று
அருள் பெறாமல் வாடுபவர்களுக்கு
உதவுதல் வேண்டும். பகைதான்
எல்லாவற்றிலும் பெரியது. பகைவரை
வென்று பிறரைப்
பேணாதவர்களை அழித்தல் வேண்டும். விரும்பிய காதலைப்
பெற்று சேர்ந்து வாழ்தல் . இப்படி
இல்லாதவர்க்கு அளிக்கும் அறம்,
எதிரியை
அழிக்கும் பொருள், இனியவரைத் துய்க்கும் இன்பம்
ஆகிய மூன்றையும்
செல்வமாகிய பொருள் தரும். இப்படிச்
சொல்லிவிட்டு நம் காதலர்
சென்றார். அவர் பொர்ருளோடு
திரும்பி வருவார் என்று உறுதியாகச்
சொல்கிறேன். காலடி தாங்கமுடியாத
அளவுக்குப் பொடி சுடும் காடு
என்றார். அந்தக் காட்டில் தன்
குட்டியும், பெண்யானையும்
கலக்கிய
கொஞ்சமாக இருக்கும் நீரை அவை
இரண்டும் உண்ணுமாறு காட்டி
ஊட்டிவிட்டு கடைசியில்
மீதமிருப்பதை ஆண்யானை உண்ணும் காடு
அது எனவும் சொன்னாரே. அந்தக் காட்டில் இன்பம் இல்லை. இலை
தீய்ந்து போன காய்ந்த மரங்கள்
நிற்கும். துன்பம் தரும் தன்மை
கொண்ட காடு என்றார். அந்தத்
துன்பத்தால் வாடும் தன் பெண்-
புறாவை ஆண்-புறா தன் மென்மையான
சிறகுகளால் விசிறிக்கொடுக்கும்
என்றும் சொன்னாரே.
மலைமேல்
வளரும் மூங்கிலே காயும்படி வெயில் கொளுத்தும்.
எனவே நெருங்கமுடியாத காடு அது என்று அவர்
சொன்னார். அந்தக்
காட்டில் நிழல் இல்லாமல் வருந்தும் பெண்மானுக்கு
அதன் ஆண்மான்
தன் உடம்பு நிழலைத் தந்து காப்பாற்றும் என்றும்
சொன்னாரே.
இப்படிப்பட்ட நலம் மிக்க காட்டு வழியில் அவர்
சென்றார்.
அப்படிப்பட்டவர் நாம் புனைந்திருக்கும் நல்லணிகளை
இழந்து நாம்
வாடும்படி விடமாட்டார். வீட்டில் பல்லி
ஒலிக்கிறது. என் இடக்கண்
துடிக்கிறது. இவை இரண்டும் நல்ல நிமித்தங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக