நற்றிணை 10 அண்ணாந்து ஏந்திய

 

          நற்றிணை 10 அண்ணாந்து ஏந்திய

பாடியவர் : பெயர் அறியப்படவில்லை

திணை : பாலைத்  திணை

கூற்று  : உடன் போக்கும் தோழி கையடுத்தது.

பாடல் :

 அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும், 

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!

இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்     5

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,

வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்

பழையன் வேல் வாய்த்தன்ன நின் 

பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

பொருள்: மலர்கள் விளங்கும் பொழில் சூழ்ந்த ஊரை உடையவனே, இனிய கடுப்பு உடைய

கள் உணவையும் இழையணிந்த நெடிய தேர்களையும் உடைய வலிமை மிக்கவர்

சோழமன்னர். இச் சோழ மன்னர் கொங்கரை அடக்கும் பொருட்டு வெண்மையான கோட்டினை

உடைய யானைகளை கொண்ட போஓர் எனும் ஊரின் தலைவனாகிய பழையன் என்னும்

படைத்தலைவனிடம்   தப்பாத வேல் படையை பெற்று வைத்திருந்தார் . அத்தகைய

வேற்படையைப் போலத்   தப்பாத உன்னுடைய நல்ல சொல்லைக் கேட்டு உண்மை என

தெளிந்தாள்  இவள்.  இவளுடைய அண்ணாந்து ஏந்திய கொங்கைகள் தளர்ந்தாலும் பொன்

போன்ற மேனியிலே கருமணி போலத் தாழ்ந்த நல்ல நெடும் கூந்தல் நரையுடன்  முடிக்க

பெற்றாலும் இவள் நமக்கு பயன்பட மாட்டாள்  , முதிர்ந்தாள் என்று கருதி கைவிடாது

பாதுகாப்பாயாக.

 

கூற்று விளக்கம் : தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி வைத்து

இருளிலே தலைவியைத் தலைவன்பாற் சேர்த்துக்  கையடுத்தல் செய்து இருவரையும்

வலஞ்செய்து நின்று நின் மாறுபடாத மொழியையைத்  தெளிந்து புகல் புக்க இவளை முதுமை

எய்தினும் கைவிடாது பாதுகாப்பாயாக என தலைமகனுக்கு ஒரு படுத்திக் கூறுவது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்