நற்றிணை 09 அழிவிலர் முயலும்

 

       நற்றிணை 09 அழிவிலர் முயலும் 

பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுககோ

திணை : பாலை

கூற்று  :  கூற்று இது உடன் போகா நின்ற தலைமகன்

தலைமகட்கு உரைத்தது.

 பாடல் 

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்

வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,

அலமரல் வருத்தம் தீர, யாழ நின்

நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,

பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி

5


சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,

நிழல் காண்தோறும் நெடிய வைகி,

மணல் காண்தோறும் வண்டல் தைஇ,

வருந்தாது ஏகுமதி- வால் எயிற்றோயே!

மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்





நறுந் தண் பொழில, கானம்;

குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

 

பொருள் :வெண்மையான பற்களை உடையவளே, நாம் போகும் வழியில் உள்ள காட்டில் மா

மரத்தில் உள்ள அரும்புகளைக்  குயில் கோதிக் கூவி விளையாடும். மேலும் வழியில்

அடுத்தடுத்துப் பல ஊர்களும் உள்ளன .  சிதைவு இல்லாத செயலை முயல்கின்ற ஆர்வம்

மிக்கவர்கள் அச்செயல் நன்கு முடிய தாம் வழிபடுகின்ற தெய்வத்தைக் கண் கண்கூடாகக்

கண்டார் போல யாம் நெடுங்காலம் நின்னை பெற முயன்றதனால் ஏற்பட்ட மனக் கவலையும்

வருத்தமும் தீரும்படி அழகிய மென்மையான பருத்த தோள்களை அடைந்தோம் . ஆகவே 

இனி நீ பொரியைப் போன்ற பூக்களை உடைய புன்னையினது அழகுமிக்க ஒளிபொருந்திய

தளிரை சுணங்கு நிரம்பிய அழகிய முலையில் கண்டாரை வருத்தும் அழகு வீற்றிருக்க

அணிந்து கொள்க. நிழலைக்  கண்ட இடத்தில் எல்லாம் நெடும் பொழுது தங்கி மணல் பரப்பை

கண்ட இடத்தில் எல்லாம் சிறுவீடு சமைத்து விளையாடி வழி நடந்த வருத்தத்தைப்

போக்கிவிட்டு மெல்லச் செல்க.

 

கூற்று விளக்கம் :தலைவி கருதிய வண்ணம் அவளை இரவிலே அழைத்துக்கொண்டு

செல்லும் தலைமகன் விடிந்தபின் சுரமும் இடையூறும் கடந்து போகும்போது தலைமகளை

நோக்கி நெறி எங்கும் பொழிலும் ஊர்களும் உள்ளன ஆதலின் நீ விளையாடி வருந்தாது

ஏகு எனக்கூறி மெல்லக் கொண்டு செல்வது.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்