நற்றிணை 08 அல்கு படர் உழந்த

 

 

                 நற்றிணை 08 அல்கு படர் உழந்த

பாடியவர் : பெயர் அறியப்படவில்லை

திணை   : குறிஞ்சித் திணை

கூற்று    : இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண்  தலைமகளை  ஆயதொடும்  கண்ட தலை மகன் 

சொல்லியது .

 

பாடல்

அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,

பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,

திரு மணி புரையும் மேனி மடவோள்

யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!

துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல்    5

அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்

தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்

கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்

திண் தேர்ப் பொறையன் தொண்டி-

தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!10

 

பொருள் : மிகத் துன்பம் அடைந்த செவ்விய கோடுகள் படர்ந்த வளப்பமும் குளிர்ச்சியும்

உடைய கண்கள்.  பல பூக்களால் மாறுபடத் தொகுக்கப்பட்ட தழையாடையை அசைய உருத்த

அல்குல் ,அழகிய நீலமணி போன்ற மேனி ஆகியவற்றைக் கொண்ட இவ் இளம் பெண்

யாருடைய மகளோ? அசையாத உள்ளம் கொண்ட எம்மையே துன்பம் செய்தாள் .

இப்பெண்ணைப்  பெற்று எனக்கு உதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்க .அகன்ற

வயலில் அரிந்தவர்களால் அரியப்பட்டும் அரிச்சூட்டை எடுப்போரால் கொண்டுவரப்பட்டும்

குளிர்ந்த சேறு பரந்து அழகுமிக்க வலிய தண்டினை உடைய கண்போல் மலர்கின்ற நெய்தல்

பூக்கள் நெற்கதிர்ப் போரில் மலரும்.  இவ்வளவு வளத்தையும் திண்மையான தேரினையும்

கொண்ட பொறையனின் தொண்டி நகர் போன்ற சிறப்பு இவள் தாயும் பெறுவாளாக.


கூற்று  விளக்கம் : இயற்கைப் புணர்ச்சி இறுதியில் ஆயத்தோடு கூடிய தலைமகளை

தலைமகன் இவள் யார் மகள் என வியந்து இவள் எனக்கு அடைதற்கு அரியவள் என

ஆற்றானாகி இத்தகைய மகளை பெற்று எனக்கு உதவிய பெற்றோர் வாழ்க என வாழ்த்துவது.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்