நற்றிணை 07 சூருடை நனந் தலைச்
பாடியவர் : நல்வெள்ளியார்
திணை : பாலைத் திணை
கூற்று : பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற்
பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத்
தோழி சொல்லியது
பாடல்
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் 5
இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே
பொருள்: தோழி, மூங்கிலின் வெண்ணிற நெல்லை தின்ற வரி பொருந்திய
நெற்றியை உடைய யானை குளிர்ந்த மணம் கமழும் மலைப் பக்கத்தில் தூங்கும்.
சிறிய இலையை உடைய சந்தன மரத்தை கொண்ட வாடிய பெரிய காட்டில்
அச்சத்தைத் தருகின்ற , அகன்ற சுனையின் நீர் நிறையவும் பெரிய
மூங்கில்களை
உடைய மலைப் பக்கத்தில் அருவிகள் ஆரவாரிக்கவும், கற்களைக் புரட்டிக் கொண்டு
ஓடி வரும் வேகம் மிக்க காட்டாற்றில் மூங்கில் முழுகவும் வெள்ளம்
பெருகி
அலைகள் மோதும். வெள்ளப்பெருக்கு நிகழும் வண்ணம் இடியோடு
முழக்கம் செய்து முகில்கள் இப்போதே மழை பெய்ய மின்னும். இக்காலத்தை
கண்டவுடன் அவர் இப்போதே வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வார் நீ
வருந்தாதே.
கூற்று விளக்கம்: அறத்தொடு நின்ற பின்பு திருமணம் செய்து கொள்ளாமல்
தலைவன் பொருள் தேடி நெடுந்தூரம் அழிந்து போகிறான் அந்நிலையை ஆற்றாது
தலைவிக்குத் தோழி கார்காலம் வந்துவிட்டது தலைவர் இனி வந்து நினை மனம்
புரிவார் நீ வருந்தாதே எனக் கூறியது.
கருத்துகள்
கருத்துரையிடுக