முல்லைப்பாட்டு பாடலும் விளக்கமும்
பத்துப்பாட்டில் சிறிய நூல் இது .103 அடிகளைக் கொண்டது .
ஆசிரியப்பாவால் அமந்தது . அக நூல் . பாண்டிய அரசனான
நெடுஞ்செழியனைப் பாட்டுதடைத் தலைவனாகக் கொண்டு
பாடப்பட்டதாகக் கருதப் படுகின்றது . ஆனாலும்
தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை .
பாடியவர் : காவிரி பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார்.
பாடப்பட்டவன் :தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டிய
நெடுஞ்செழியன்
திணை : முல்லை
மால்போலத் தோன்றும் மழைமேகம்
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த
மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
(1 - 5)
பொருள் :
அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை வளைத்துக்
காக்கின்ற சக்கரம்,
சங்கு பொறிக்கப்பட்ட திருமகளைத் தாங்குகின்ற பெரிய
கைகளையுடையவன் திருமால். அவன் மாபலி சக்கரவர்த்தி தாரை
வார்த்த நீர் கையில்பட்ட அளவிலே நிமிர்ந்து எழுந்த தோற்றத்தைப்
போன்று, மேகங்கள் அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல் நீரைப்
பருகி, வலப்பக்கமாக உயர்ந்து எழுந்தது. பின் மலைகளில் தங்கி
விரைந்து சென்றன.
மழைக்காலத்து மாலை நேரம்
பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,
(6)
பொருள் : அம்மேகங்கள்
பெருமழையைப் பொழிந்த சிறிய துன்பம் தரும்
மாலைப்பொழுதாக இருந்தது.
முதுபெண்டிர்
விரிச்சி கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ
முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப - (7 - 11)
பொருள் : முதிர்ந்த வயதை உடைய பெண்டிர், பிறரால் அணுக முடியாத
மிகுந்த காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில்
சென்றனர்.
நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு, யாழிசை போல் வண்டுகள்
ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும்
நறுமணம் மிக்க முல்லை
மலரையும் தூவி, இறைவனை வேண்டி கைதொழுது விரிச்சி
என்னும் நற்சொல் கேட்டு நின்றனர். (அப்பொழுது )
ஆய்மகளின் நற்சொல் கேட்டலும் தலைவியை ஆற்றுவித்தலும்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,
இன்னே வருகுவர், தாயர்”
என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர்
வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர்
வினைமுடித்து
வருதல், தலைவர்,
வாய்வது; நீநின்
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப,
(12 - 23)
பொருள் : சிறிய
கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம் கன்று தன்
தாயினைக் காணாது துயருற்று அங்கும் இங்கும் சுழன்று
கொண்டிருந்தது. அதனைப் பார்த்துக் குளிரால் நடுங்கித் தோளில்
குறுக்கும் நெடுக்குமாகக் கைகளைக் கட்டியுள்ள ஆயர்குலப் பெண்
ஒருத்தி “வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே
வர உம்முடைய தாயர் இப்பொழுதே வருவர்” என்று கூறிய
நன்மை தரும் நல்ல சொல்லைக் கேட்டோம். நல்லவர்களின் நல்ல வாய்ச்
சொல்லைக் கேட்டதனால், தலைவன் பகைவர் இடத்தையெல்லாம்
கவர்ந்து போரினை இனிதே முடித்து வருவான். இது உண்மை. நீ
உன்னுடைய துன்பத்தால் எழுந்த வருத்தத்தினை விட்டு விடு. மாந்தளிர்
போன்ற நிறத்தினை உடையவளே”!என மீண்டும் தலைவியிடம்
வற்புறுத்திக் கூறினர். தலைவி அத்தகைய ஆறுதல் மொழிகளைக்
கேட்டும் ஆற்றாளாய் அழுதாள். குவளை மலர் போன்ற அவள்
கண்களில் இருந்து முத்துப் போன்று நீர் விழ , வருத்தத்தில் இருந்தாள்.
பாசறை
அமைத்தல்
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்,
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி,
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி (24
- 28)
பொருள் : காட்டாறு
சூழ்ந்த அகன்ற நீண்ட முல்லை நிலக் காட்டில்
நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவம்
செடிகளையும், பசுமையான
சிறு புதர்களையும் வெட்டினர் . வேடர்களின் சிறு வாயில் அமைந்த
அரணையும் அழித்தனர். காட்டிலுள்ள முள்ளைக் கொண்டு மதிலுக்குக்
காவலாகவேலியைச் செய்தனர். ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல்
பரந்த பாடிவீட்டை அமைத்தனர்.
பாசறையின்
நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு, கதிர்மிடைந்து யாத்த,
வயல்விளை, இன்குளகு
உண்ணாது, நுதல்துடைத்து,
அயில்நுனை மருப்பின்தம் கையிடைக்
கொண்டென,
கவைமுட் கருவியின், வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர், கவளம்
கைப்ப (29 - 36)
பொருள் : பாசறையில் தழையால் கூரை வேயப்பட்டு,
ஒழுங்காக
அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்து உள்ள முற்றத்தில்
காவலுக்காக மதநீர் ஒழுகும் கன்னங்களும்,
சிறிய கண்களும்
கொண்ட யானைகள் நின்றிருந்தன . உயர்ந்து வளர்ந்த கரும்போடு
நெற்கதிர்களையும் கலந்து கட்டியிருக்கின்ற வயலில் விளைந்த இனிய
அதிமதுரத் தழையை உண்ணாது அவற்றைத் தனது நெற்றியில்
துடைத்து, கூரீய முனையையுடைய மருப்பின் மேலேற்றி தும்பிக்கையில்
அடக்கிக்கொண்டிருந்தது. பாகர், வடமொழியில் யானையிடம் பேசி
கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.
பாசறையில்
வீரர்களின் அரண்கள்
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு
இருக்கை
பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகுநிரைத்து,
வாங்குவில் அரணம் அரணம் ஆக, (37 - 42)
பொருள் : தவவேடமுடைய
அந்தணர், தன் காவி நிறம் தோய்ந்த
ஆடையை முக்கோலை நட்டு அதன்மேல்
தொங்கவிட்டிருப்பது போல,
வீரர்கள் தான் செய்கின்ற நல்ல போரில்
புறமுதுகிட்டு ஓடாமல்
இருப்பதற்குக் காரணமான வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புப்
புட்டிலைத் தொங்கவிட்டனர். கூடாரம்
அமைப்பதற்காக விற்களை ஊன்றி
கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில்,
பூ வேலைப்பாடமைந்த
கைவேலைக் குத்தி கேடயத்தை வரிசையாக வைத்து
வீரர்கள்
தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு
அரண்களை அமைத்தனர்.
பாசறையில்
மன்னனுக்குத் தனிஇடம்
வேறுபல் பெரும்படை நாப்பண், வேறுஓர்,
நெடுங்காழ்க் கண்டம் கோலி, அகம்நேர்பு (43 - 44)
பொருள் : வேறு
வேறான பல்வேறு படைகளின் நடு விடத்தில், நீண்ட
கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த
திரைகளால் கூறுபடுத்தி,
வேறோர் தனி இடம் மன்னனுக்கென்று
அமைத்தனர்.
மன்னனின்
இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து,
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, (45 - 49)
பொருள் :
குறுகிய வளையணிந்த முன் கையினையும்,
கூந்தல் புரளும் அழகிய சிறு
முதுகுப்புறத்தையும் உடைய பெண்கள்
இரவைப் பகலாக்கும் வலிய பிடி
அமைந்த ஒளி வீசும் வாளினைப் பல்வேறு
நிறமமைந்த கச்சில் சேர்த்து
கட்டியிருந்தனர். பாவையின் கையிலே இருக்கின்ற விளக்கில் நெய்
குறையுந் தொறும், நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து,
நெடுந்திரியினைக் கொளுத்தினர்.
பாசறையில்
காவலாளர்
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்,
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த தூங்கல்
ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (50 -
54)
பொருள் : நீண்ட
நாக்கினையுடைய அழகிய மணியின் ஓசை அடங்கிய
நடுயாமத்தில் - காட்டு மல்லிகைப்
பூத்திருக்கும். ஆடுகின்ற மல்லிகைக்
கொடியின் சிறு தூறுகள் நீர்த்திவலையோடு வீசுகின்ற காற்றுக்கு
அசைவதைப் போல தலையில்
தலைப்பாகையைக் கட்டி, உடம்பினைப்
போர்த்தியுள்ள வயது முதிர்ந்த
மெய்க்காப்பாளர், தூக்க மயக்கத்தில்
தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச்
செய்தனர்.
நாழிகைக்
கணக்கர்
பொழுதுஅளந்து அறியும், பொய்யா மாக்கள்,
தொழுதுகாண் கையர், தோன்ற வாழ்த்தி,
‘எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்;
நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து’ என்று
இசைப்ப (55 - 58)
பொருள் : பொய்த்தலில்லாது
நேரத்தைக் கணக்கிட்டு, இவ்வளவு என்று
கூறும் நாழிகைக் கணக்கர் மன்னனைக் கண்டு தொழுது, அவன்
புகழ்
தோன்றுமாறு வாழ்த்தி, ‘அலைகடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை
வெல்லுவதற்குச் செல்பவனே! உனது நாழிகை
வட்டிலில் சென்றுள்ள
நேரம் இவ்வளவு’ என்று அறிவித்தனர்.
மன்னன்
இருப்பிடத்தில் யவனர்
மத்திகை வளைஇய, மறிந்துவீங்கு
செறிவுஉடை,
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,
வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்,
திருமணி விளக்கம் காட்டி,
.............. (59 - 63)
பொருள் : குதிரைச்
சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியதால் புடைத்துத்
தோன்றும் நெருக்கிக் கட்டிய ஆடையும்,
சட்டையும் அணிந்த - அச்சம்
தரும் தோற்றமும் வலிமையான உடம்பும்
வீரமும் உடைய யவனர் –
புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமை
பொருந்திய நல்ல இல்லத்தில் அழகிய மணி விளக்கினை ஒளிரச்
செய்தனர்.
மன்னனின்
பள்ளியறையில் மிலேச்சியர்
......................................................திண்ஞாண்
எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின்,
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக, (63 - 66)
பொருள் : வலிய
கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள்
அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின்
பள்ளியறையில்,
செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும்
நாவால்
உரைக்கமுடியாத சட்டையணிந்த ஆரியர்
(மிலேச்சியர்) அருகாமையில்
இருப்பர்.
பாசறையில்
மன்னனின் மனநிலை
மண்டுஅமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய,
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளயும்;
தோல்துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து,
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்;
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து…... ( 67 - 76)
பொருள் : போர்
செய்வதில் கொண்ட மிக்க விருப்பத்தால், மன்னன்
பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல்
நாள் நடைபெற்ற போர்க்களக்
காட்சிகளை நினைத்தபடியே)
படுத்திருந்தான். பகைவர் எடுத்தெறிந்த
வேல் நுழைந்ததால் புண்பட்டு, பெண் யானைகளை மறந்திருக்கின்ற
ஆண்யானைகளையும், அடியுண்ட பாம்பு துடிப்பதையும் போன்று, ஆண்
யானையின் பருத்த துதிக்கை
வெட்டுப்பட்டு வீழ்ந்து துடித்ததையும், தேன்
ஒழுகும் வஞ்சி மாலைக்கு வெற்றியைத்
தந்து செஞ்சோற்றுக் கடன்
தீர்த்து போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைத்தும்,
தோலாலான கடிவாளத்தையும் அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய
அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது வருந்தும்
குதிரையைப் பற்றி சிந்தித்தும்,
ஒரு கையினைப் படுக்கையின் மேல்
ஊன்றி மற்றொரு கடகம் அணிந்த கையினால்
தலையைத் தாங்கி நீண்ட
நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்
மன்னன்.
வெற்றிக்குப்
பின் பாசறையில் மன்னன்
பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல்,
நகைதாழ்க் கண்ணி நல்வலம் திருத்தி,
அரசுஇருந்த பனிக்கும் முரசுமுழங்கு
பாசறை
இன்துயில் வதியுநன்....................
(77 - 80)
பொருள் : பகைவரைக்
குறித்துப் படைக்கலங்களைச் செலுத்திய
வலிமையான விரலாலே, தன்னுடைய ஒளியைத் தங்கச் செய்யும்
போருக்கு அணிந்ததாகிய வஞ்சி மாலைக்கு,
நல்ல வெற்றியைக்
கொடுத்தமையால் மனநிறைவு பெற்று, பகையரசர் கேட்டு நடுங்க,
வெற்றிமுரசு முழங்க பாசறையில் (வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்)
இனிமையாகத் துயில் கொண்டான் மன்னன்.
தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின்
நிலை
நெஞ்சுஆற்றுப் படுத்த நிறைதபு
புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும்,
ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென
உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழைநெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர்அழல
இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து,
முடங்குஇறைச் சொரிதரும் மாத்திரள்
அருவி
இன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின .... .... ....
.... (80 - 89)
பொருள் : தலைவன்
வரக்காணாது துயருற்று வருந்திய தலைவியை
நெஞ்சமானது, ‘ஆற்றியிரு’
என்று சொல்லிக் கொண்டிருந்த்து. ஆனால்,
தலைவியோ துயரத்தை மறைக்க முடியாது
வருத்தத்தில் இருந்தாள்.
நீண்ட நேரம் சிந்தித்தாள். பின் தன்னைத்
தேற்றிக் கொண்டாள்; கழன்று
விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற கழறாமல் அணிந்து
கொண்டாள்; அறிவு மயங்கியும், அவ்அறிவு மயக்கத்தால்
பெருமூச்செறிந்தும், அம்புதைத்த மயில் போல் நடுங்கினாள். அவளின்
அணிகலன்கள் நெகிழ்ந்தன.
பாவை விளக்கின் பெரிய சுடர் எரிய,
அகன்று சிறந்து உயர்ந்து விளங்கும்
ஏழு அடுக்கான அழகிய வீட்டில், கூரை கூடும் இடங்களில் மழைநீர்
அருவி போலச் சொரிந்தன. அதனால் ஏற்பட்ட
இனிய பலவாகிய
முழக்கத்தினைக் கேட்டவாறே கிடக்கின்றாள்
தலைவி.
அத்தலைவியின் காதுகள் நிறையுமாறு
ஆரவாரித்தன.
போரில்
வெற்றி பெற்றுத் தலைவன் வருதல்
……………………………………………………..வென்று, பிறர்
வேண்டுபுலம் கவர்ந்த, ஈண்டுபெருந் தானையொடு
விசயம், வெல்கொடி
உயரி, வலன்ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப .... ....
....(89 - 92)
பொருள் : பகைவரை
வென்று அவர்கள் விரும்புகின்ற நிலங்களைக்
கவர்ந்து, பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்தியபடி,
வெற்றியைஅறிவிக்கும் வகையில், ஊது கொம்பும், சங்கும் முழங்கத்
திரும்புகின்றான்தலைவன்.
கார்ப்பருவத்தில்
செழித்திருக்கும் முல்லைநிலம்
.................................................அயிர
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர,
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி,
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரிமருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில்,
(92 - 100)
பொருள் : முல்லைநிலத்து
நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக்
கொண்டக் காயா மலர் மை போல்
மலர்ந்திருக்கவும், தளிரையும்
பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை,
பொன் போன்ற மலர்களைச்
சொரியவும், காந்தளின்
குவிந்த மொட்டுகள் அழகிய கை போல
பூத்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய
வழியிலே, வானம்
தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த –
வளைந்த கதிரினையுடைய வரகினூடே, திரிந்த கொம்புகளைக் கொண்ட
ஆண்மானுடன் பெண் மான் துள்ளிக்
குதித்து விளையாடும். இத்தகைய
முல்லைநிலத்து, எதிரே
செல்லும் மேகங்கள் மழையைப் பொழிகின்ற கார்
காலத்தில்...............
அரசனின்
தேர்!
முதிர்காய் வள்ளியம் காடு பிறக்குஒழிய,
துனைபரி துரக்கும் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (101
- 103)
பொருள் : போர்
வினையை நன்கு ஆற்றிய தலைவன் - முதிர்
காயினையுடைய வள்ளிக்கொடி படர்ந்த காடு,
பின்னோக்கிச் சென்று
மறைய விரைந்து செல்லும் தேரினை
விரைவாகச் செலுத்தினான்.
நெடுந்தேரில் பூட்டப்பட்டுள்ளக்
குதிரையின் குளம்பொலி, (தலைவனின்
வரவு பார்த்துக் காத்திருக்கும் தலைவியின்
செவிகள் நிறையுமாறு
ஆரவாரித்தன .
கருத்துகள்
கருத்துரையிடுக