நற்றிணை 87, உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்

 

        நற்றிணை 87, உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்

 

பாடியவர் -       நக்கண்ணையார்,

 

திணை   -    நெய்தற் திணை –

 

கூற்று    -   தலைவி தோழியிடம்  கூறியது

 

பாடல் சூழல் ­- வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி

 

கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது.

 

பாடல்

 
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்


ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,


வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு


நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,


அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப்
  5


பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை


துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்


சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,


பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே

 

பொருள் :   தோழி!  தலைவரது நாட்டில் உள்ள பெரிய அடியையுடைய புன்னை

 

மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து அவற்றின் தாது கடலின் துறையில்

 

மேய்கின்ற சிப்பியின் ஈரமான முதுகின் புறத்தே (ஓட்டின் புறத்தே) விழும்

 

சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெரிய குளிர்ந்தக்

 

கரையில் உள்ள சோலையையும் நான் நினைத்த அப்பகல் பொழுதில், ஊரில்

 

மாமரத்தில் இருக்கின்ற முள்ளைப் போன்ற பற்களையுடைய வௌவால்

 

உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடித் தூங்கும் பொழுதிலே, போர்களில்

 

 

வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய

 

காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக்

 

கனவு கண்டாற்போல், தலைவரோடு இருந்ததாக நான் கனவு கண்டேன்.

 

ஆனால் அவ்வின்பம் நான் விழித்தவுடன் ஒழிந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்