கலித்தொகை 6 மரையா மரல் கவர மாரி வறப்ப பெருங்கடுங்கோ
கலித்தொகை 6 மரையா மரல் கவர, மாரி வறப்ப பெருங்கடுங்கோ
பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
திணை - பாலை
கூற்று - தலைவி கூற்று
மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம் 5
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பு அறச் சூழாதே ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது 10
இன்பமும் உண்டோ எமக்கு.
பொருள் :
காட்டுப் பசுவானது உண்ண வேறு உணவு எதுவும் இல்லாததால்
மரல்
செடியை உண்ணுமாறு, மழை இல்லாது
வறண்டு போக, மலை ஓங்கிய
செல்லுதற்கரிய
பாலை நிலத்தின் அரிய வழியில் செல்வபவர்கள்,
ஆறலைக் கள்வர்களின் சுரைப் பொருந்திய அம்புகள் தங்கள்
உடலைத்
தைத்ததால், வருந்தி, நீர்
வற்றி வறண்டு வருந்தும் சூழல் ஏற்படும் .
அப்போது
நாவிற்கு நீர் பெற முடியாத சூழ்நிலையில் தம் கண்ணீரால்
நாவின் வறட்சியை நீக்கிப் போக்கும் கொடுமையான காடு என்று
காரணம்
காட்டி என்னை விட்டுப் பிரிய நீர் நினைத்தீர் . ஆயின், என்னை நீர்
அறியாதவர் போல் இவற்றைக் கூறுகின்றீர். இவை நன்றாகிய தன்மை
உடையவை அல்ல, ஐயா.
அன்பு நீங்க பிரிதலைக் கருதாது, உம்முடன்
வழியில் துன்பத்திற்குத் துணையாக நான் வர
விரும்புகின்றேன்.
அதைவிட வேறு இன்பம் எனக்கு உண்டா?
நன்றி : tvu library
கருத்துகள்
கருத்துரையிடுக