கலித் தொகை - 51 சுடர்த்தொடீஇ! கேளாய்!

            கலித் தொகை - 51  சுடர்த்தொடீஇ! கேளாய்!

 

பாடியவர் – கபிலர்

திணை - குறிஞ்சி

கூற்று -  தலைவி

( ‘புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி, பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ தலைவி, தோழிக்குக் கூறியது)

 

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்

மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,

நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!  5

உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,

'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!

உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு,  10

'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,

'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம்  15

செய்தான், அக் கள்வன் மகன்.

 

பொருள் : 

ஒளியுடைய வளையல்களை அணிந்த என் தோழியே!  இதைக்

கேட்பாயாக!  முன்பு நம்முடைய சிறிய மணல் வீடுகளை கலைத்தும்,

நாம் சூடியிருந்த மலர்ச்சரத்தை அறுத்தும், நம்முடைய வரிப்பந்தை

எடுத்துக் கொண்டும் ஓடியும்  நம்மை வருந்தச் செய்த பொறுப்பற்றவன்,

 ஒரு நாள் என் தாயும் நானும் வீட்டிலிருந்த பொழுது வந்து, “வீட்டில்

உள்ளவர்களே! நான் தாகத்தில் இருக்கின்றேன்.  எனக்குக் குடிக்கத்

தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டான்.  என்னுடைய தாய், “ஒளியுடைய

அணிகலன்களை அணிந்தவளே!  அடர்ந்த பொற்கிண்ணத்தில் தண்ணீர்

வார்த்து அவனுக்குக் கொடு” என்றாள்.  அவன் யார் என்பதை அறியாமல்

நான் அவனிடம் சென்றேன்.  வளையல் அணிந்த என் முன் கையைப்

பற்றி என்னை வருத்தினான் அவன்.  “அம்மா! இவன் செய்ததைப் பார்”

என்று நான் கலக்கத்துடன் கூறினேன்.  என் தாய் அலறிப் புடைத்துக்

கொண்டு ஓடி வந்தாள்.  அவள் அங்கு வந்தவுடன் “நீரைக்

குடிக்கும்பொழுது விக்கினான்” என்று கூறினேன்.  என் தாய் அவனுடைய

முதுகைத் தடவிக் கொடுத்தாள்.  தன் கடைக்கண்ணால் என்னைக்

கொல்லுவது போல் பார்த்து நட்புடன் சிரித்தான், அந்தக் கள்வன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்