சிலப்பதிகாரம் மனையறம்படுத்த காதை

                                                             


சிலப்பதிகாரம்  மனையறம் படுத்த காதை 


 உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற்

பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்

முழங்குகடல் ஞால முழுவதும் வரினும்

வழங்கத் தவாஅ வளத்த தாகி

அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம்

5


ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்

கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக்

குலத்திற்குன்றாக் கொழுங்குடிச் செல்வர்

அத்தகு திருவின் அருந்தவ முடித்தோர்

உத்தர குருவி னொப்பத் தோன்றிய

10


கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்

மயன்விதித் தன்ன மணிக்கா லமளிமிசை 

நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழி

 

 

 பொருள்:

புகழ்வாய்ந்த சிறப்பும் ,அரசரும் விரும்பும் செல்வமும் உடைய பரதர்வர்கள்

மிகுதியாக வாழும் பூம்புகார் நகரம்.அலைகள் முழக்கமிடும் கடல்களுக்கு அப்பால்

உள்ளஉலகினர் எல்லோரும்,ஒன்று கூடி வந்தாலும்,அவர்கள் விரும்பும் விருந்தினை

சலிப்பின்றி அள்ளி வழங்கும் வளம் உடையது.கடல் வழியாகவும்,தரை வழியாகவும்

வாணிபம் செய்து,அரும்பொருட்களை கொண்டுவந்து குவித்த,செல்வ

செழுமையுடைவர்களாக அங்கிருந்த வாணிகர்கள் திகழ்ந்தனர்.அத்தகைய

செல்வத்தால்,தருமங்கள் பலவும் செய்தவர்கள்,’துருவ நட்சத்திரம்’ போன்று விளங்கிய

குவளை மலர்போன்ற கண்களைக் கொண்ட கண்ணகியும்,அவளுடைய கணவன்

கோவலனும் அக்குடியில் தோன்றினர் .

     

அத்தகைய  சிறப்புடைய  தம்பதியர், அத்திருநகரில் எழுநிலை 

மாடமொன்றின,இடைநிலையான நான்காம் மாடத்தில்,மயனே செய்தது போன்ற

அழகிய கால்களுடைய கட்டிலின் மேல் அமர்ந்திருந்தனர்.





கழுநீ ராம்பல் முழுநெறிக் குவளை

அரும்புபொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை



வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ

மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்

கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்

தாதுதேர்ந் துண்டு மாதர்வாண் முகத்துப்

புரிகுழ லளகத்துப் புகலேக் கற்றுத்



திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து

மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த

கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து

 வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்

கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து

25


விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்

நிரைநிலை மாடத் தரமிய மேறிச்

 

 

பொருள் :

செங்கழுநீர் மலர்; ஆம்பல் மலர்;முழுமையான இதழ்களின் அழகு குலைந்திடாத

குவளை மலர்;வண்டுகள் தேன்  உண்ண வாய்ப்பு நல்கும் வண்ணம் அரும்பி இருந்த

 தாமரை மலர் மற்றும் வயல்வெளி நீர்நிலை மலர்கள்,மேன்மை பொருந்திய

தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள்;செண்பகச்சோலையில் அழகு மாலை

போன்று இதழ்விரித்து மலர்ந்திருக்கும் குருக்கத்தி மலர்கள்,ஆகியவற்றின் தாதினை

எல்லாம் தேடிச் சென்று வாரி உண்டு ஒளிபொருந்திய முகம் கொண்ட மகளிரின்

சுருண்ட கூந்தலின் நறுமணம் நுகர்ந்திட வண்டுகள் சுழன்று திரிந்தன.

அவ்வண்டுகளுடன தென்றலும் ,தம்பதியர் வீட்டினுள், முத்து மணிகளால் அணிசெய்த

நேர்த்தியான சாலரமொன்றின் வழியாக நுழைந்தது.தென்றலின் வரவைக்கண்ட

கோவலனும் கண்ணகியும் மிகவும் மகிழ்ந்து,காதலின் மிகுதியால் கூடிட

விரும்பி,மலர் அம்புகள்   ஐந்தினைச் சுமந்த மன்மதன் வீற்றிருக்கும், தம் எழுநிலை

மாடத்தின் நிலா முற்றத்துக்கு ஏறி சென்றனர்.



சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்

கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி

முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும்


கதிரொருங் கிருந்த காட்சி போல

வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த

வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு

கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்

தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத்

35

தீராக் காதலின் திருமுக நோக்கிக்

கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை

 



 

பொருள் :

வண்டுகள் சுவைக்கும் வாசனைப் பூம்படுக்கையின் மேல் கோவலனும்,கண்ணகியும்

சென்று அமர்ந்தனர் .கோவலன் கண்ணகியின் பெரிய தோள்களில்

கரும்பையும்,வல்லிகொடியையும் எழுதினான்.இந்த கட்சி,முதிர்ந்த கடல் சூழ்ந்த உலகம்

முழுவதையும்,தம் கதிர்களால் ஒளியேற்றும் சூரியனும்,சந்திரனும் ஒரு சேர இருந்தது

போல இருந்தது.வண்டுகள் பாடலுக்கு மொட்டவிழ்ந்த,நீண்ட நிலாப்

போன்ற,வெண்மையான  இதழ்களையுடைய,மலர்ந்த மல்லிகைப் பூக்களால்

தொடுத்த மாலையினைக் கண்ணகி அணிந்திருந்தாள். கோவலன்,  

செங்கழுநீர் மாலையினை அணிந்திருந்தான். இருவர் மார்பிலும் இருந்த

மாலைகள், தம்முள் கலந்து மயங்கின. அந்நிலையில் தளர்த்தவனாக,ஆராத

காதலுடன்,தன் மனைவியின் முகத்தை கோவலன் நோக்கினான்.முன்னர்

எண்ணாதனவெல்லாம் எண்ணி,அவள் நலனை பெரிதும் பாராட்ட தொடங்கினான்.


குழவித் திங்கள் இமையவ ரேத்த

அழகொடு முடித்த அருமைத் தாயினும்

உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையிற்


பெரியோன் தருக திருநுத லாகென

அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப்

படைவழங் குவதோர் பண்புண் டாகலின்

உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்

இருகரும் புருவ மாக வீக்க

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலில்

தேவர் கோமான் தெய்வக் காவல்

படைநினக் களிக்கஅத னிடைநினக் கிடையென

அறுமுக ஒருவனோர் பெறுமுறை யின்றியும்

இறுமுறை காணும் இயல்பினின் அன்றே

அஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச்

செங்கடை மழைக்கண் இரண்டா வீத்தது

 



பொருள் :

இளம்பிறை நிலவானது,தேவர்களும் போற்றும் சிவபெருமானின் சடைமேல் முடித்த

பெருமையினை உடையது. ஆனால் அது,திருமகளான உன்னுடன் பாற்கடலில் பிறந்த

உடன்பிறப்பல்லவா! அதனால் தான்,அது உனக்கே உரியது என இறைவன்,அதனை உன்

நெற்றியாகத் தந்தானோ? போர்க்களத்தில் தம்மை எதிர்க்கும்

பகைவர்க்கு, படைகலங்கள் வழங்கிப் போர் புரிய சொல்லும் ஒரு முறை

உண்டு. அதைப்போலவே மன்மதன் தானும் தம் கரும்புவில்லை,உன் இரு

 புருவங்களாகத் தந்தானோ? தேவருண்ணும் மருந்தாகிய அமிழ்தத்திற்கு முன்னே

பிறந்த இலக்குமி நீ என்பதால்,தேவர் கோமான் இந்திரன் தன் கைக்கொண்ட

வச்சிரப்படையை உன் இடையாகத் தந்தானோ?


மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்

சாயற் கிடைந்து தண்கான் அடையவும்

அன்ன நன்னுதல் மென்னடைக் கழிந்து



நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும்

அளிய தாமே சிறுபசுங் கிளியே

குழலும் யாழும் அமிழ்துங் குழைத்தநின்

மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்

மடநடை மாதுநின் மலர்க்கையி னீங்காது


உடனுறைவு மரீஇ ஒருவா வாயின

 

 

பொருள் :

   கரிய பெரிய தோகை உடையதும் ,நீல நிறம் கொண்டதுமான மயில்,நின் அழகிய

சாயலுக்கு அஞ்சி தோற்றுக் காட்டுக்குள் சென்று அடைந்து விட்டது! நல்ல நெற்றி

உடையவளே! அண்ணம்,நின் மென்மையான நடைக்கு அஞ்சி செயலிழந்து,நல்ல

நீரினையுடைய வயல்களிடையே மலர்ந்திருக்கும் மலர்களிலே சென்று ஒளிந்து

கொண்டது! நின் மொழிக்கு தோற்றுப் போன பசுமை நிறமுடைய சிறிய கிளி

இரக்கத்துக்குரியது! குழலிசையோடு,யாழிசையோடு அமிழ்தமும் குழைத்தாற்போன்ற

நின் மழலை பேச்சிற்கு அவை வருந்தி சோர்ந்தன. எனினும் மென்னடையினை உடைய

மாதரசியே!நின் பேச்சின் இனிமையைத் தாமும் கற்பதற்காக,நின் மலர்க்கரம் நீங்காது

உன்னுடனேயே தங்கி,உன்னை வெறுத்துப் பிரிந்து போகாமல் இருகின்றன.



நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்

மறுவின் மங்கல வணியே யன்றியும்

பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல்

பல்லிருங் கூந்தற் சின்மல ரன்றியும்

65

எல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல்

நானம் நல்லகில் நறும்புகை யன்றியும்

மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொல

திருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியும்

ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல

70

திங்கண்முத் தரும்பவுஞ் சிறுகிடை வருந்தவும்

இங்கிவை யணிந்தன ரென்னுற் றனர்கொல் 

 



பொருள் :

         நறுமண மலரினை சூடிய கோதையே!நின்னைப் புனைந்து அழகு

மகளிர்,குற்றமற்ற மங்கலமான நின் இயற்கை அழகு இருக்க,நின் மாங்கல்ய அணி மேலும்

அழகு சேர்த்திருக்க,இன்னும் பல அணிகலன்களை உனக்கு அணிவித்தது ஏன்?

பல்வகைத் தோற்றம் கொண்டு பொலிகின்ற நின் கருங்கூந்தலுக்குச் சில மலர்கள் மட்டும்

 சூட்டினால் போதும் என்றிருக்க,ஒளியுடைய அவிழ்கின்ற மாலையையும்

சூட்டியிருக்கின்றனரே!அம்மாலையோடு அவர்களுக்கு என்ன உறவோ?

நின் கூந்தலை மணமாக்க அகிற்புகையின் நறுமணமொன்றே போதும் என்றிருக்க,

வாசனையூட்ட வேண்டிக் கஸ்தூரிக் குழம்பு கொணர்ந்தனரின் உள்நோக்கம் தான் என்ன?

அழகுத்திரு மார்புகளுக்கு அணி செய்திட,தீட்டிய கோலங்களே போதும் என்றிருக்க

முத்து வடம் கொணர்ந்தவர்க்கு,அதனுடனுள்ள உரிமை தான் என்ன?

மதி போன்ற நின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பிடவும்,சிறிதான நின் இடை

துவண்டு வருந்திடவும்,மென்மேலும் உன் மீது அணிகலன்கள்

பூட்டுகின்றனரே எதனால் இவ்வாறு செய்கின்றனர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்