கலித்தொகை 37 கய மலர் உண்கண்ணாய் கபிலர்

 

 

           கலித்தொகை 37  கய மலர் உண்கண்ணாய்  கபிலர்

 

பாடியவர் – கபிலர்

திணை - குறிஞ்சி

கூற்று -தலைவி   

(நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும்

செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்,

உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை,’ தன்னை அவள் மறையாமை

காரணமாக, ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல் வேறு

கவர் பொருள் நாட்டத்தான்’ தலைமகட்குத் தோழி கூறியது)

 

 

கய மலர் உண்கண்ணாய்! காணாய்: ஒருவன்

வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட

கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,

முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற

நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்;                5            

பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்

சேயன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்

கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;

பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; ‘இன்னதூஉம்

காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் 10         

தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்

நாண் இன்மை செய்தேன்: நறுநுதால்! ஏனல்

இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,

ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,

‘ஐய! சிறிது என்னை ஊக்கி’எனக் கூற,         15          

தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்

மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,     20         

ஒண்குழாய்! செல்க’எனக் கூறி விடும் பண்பின்

அங்கண் உடையன் அவன்

 

குளத்தில் உள்ள குவளை மலர்போல் மைதீட்டிய கண்களை உடைய என்

தோழியே!  நான் கூறுவதைக் கேட்பாயாக! வில்லைத் தன் கையில்

ஏந்திய, மாட்சிமைப்பட்ட மலர்ச்சரத்தை அணிந்த ஒருவன், வலிமையான

விலங்கின் காலடியைத் தேடுபவன் போல் வந்து, என்னை நோக்கி,

 அவனுடைய காதலைக்  குறிப்பால் காட்டுவது அன்றி, என் மேல் தான்

உற்ற காதல் நோயைப் பற்றிக் கூறாமல் பல நாட்களாக சென்றான், நான்

உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்தேன்.  என் முன்னால் வந்து

தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன்.  என்னுடைய

உணர்வுகளைக் கூறுவது பெண்மைத் தன்மைக்கு ஏற்றது இல்லை. 

ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ

என்று எண்ணி, ஒரு நாள், என் தோள்கள் மெலிந்து நான் உற்ற

வருத்தத்தால், துணிவுடன், நாணம் இல்லாத செயல் ஒன்றை நான்

செய்தேன், நறுமண நெற்றியையுடைய என் தோழியே!  கிளிகளை விரட்டி

நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சலில் நான் ஆடிக்

கொண்டிருந்தேன்.  அப்பொழுது அங்கு வந்த அவனை நோக்கி, “ஐயா! என்

 ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடு” என்று நான் கூற, “பெண்ணே

நல்லது!” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நழுவியது போல் நான்

நடித்து அவன் மார்பில் பொய்யாக விழுந்தேன்.  அது உண்மை என்று

எண்ணி, அவன் என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.  அங்கு

நான் அறியாதவள் போல் கிடந்தேன்.  நான் என்னுடைய மயக்கம்

தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், விரைந்து ‘ஒளியுடைய

அணிந்தவளே!  எழுந்து செல்” என்று கூறும் பண்புடையவன் அவன்.

 நன்றி : tvu library 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்