குறுந்தொகை - 32 காலையும் பகலும் கையறு மாலையும் அள்ளூர் நன்முல்லையார்.

 குறுந்தொகை - 32. காலையும் பகலும் கையறு மாலையும்

 

பாடியவர் : அள்ளூர் நன்முல்லையார்.

திணை :குறிஞ்சி

கூற்று :தலைவன் கூற்று

       (தோழியினிடம் தன் குறைகூறி அவள் உடம்படாமையை அறிந்த

தலைவன், யான் தலைவியின் பிரிவை ஆற்றேன்; அவளை அடையும்

பொருட்டு மடலேறினால் அவளுக்குப் பழி உண்டாகும்;

வாழ்தலும் பழி; ஆதலின் இவை நேராத  வண்ணம் நீ குறைநேர்வாயாக

என்று அவளுக்குக் கூறியது).

 

காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்

மடலோடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே

வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.


 



 பொருள் :

    காலைப்பொழுதும் உச்சிப் பொழுதும் பிரிந்தோர் வருந்துவதற்குக்

காரணமாகிய மாலைப் பொழுதும் ஊரினர் உறங்குகின்ற இடையிரவும்

விடியற்காலமும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோன்றி

அழிந்துவிடின்  அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு

வருமாயின் அப்போது குதிரையெனக் கொண்டு பனை மடலால் செய்த

உருவத்தை ஊர்ந்து தெருவில் வெளிப்பட்டு யாவரும் இவளால் இவன்

இச்செயல் செய்தானென்று தெரியும்படி தலைவி எனக்குச் செய்த துயரைப்

பலர் அறியச் செய்தலும் பழி உண்டாகும்; அது செய்யாது உயிரோடு

வாழ்ந்திருத்தலும் பழி உண்டாகும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்