புறநானூறு 204 ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

 

         புறநானூறு 204 ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

 

 

பாடியவர் : கழைதின் யானையார்.


பாடப்பட்டோன் : வல் வில் ஓரி.


திணை :பாடாண்.


துறை: பரிசில்
.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,


ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;


கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,


கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;


தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

 

5

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;


ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,


சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,


உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;


புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை

 

10

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

 

பொருள் :

 ஒருவரிடம் சென்று இரத்தல் இழிவானது . அவ்வாறு ஒருவர்  கேட்ட

பிறகு, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிவானது .

ஒருவர்  கேட்பதற்கு முன் இப்பொருளை எடுத்துக்கொள் என்று

கொடுப்பது உயர்ந்தது. அப்படிக் கொடுத்த பிறகு அதை ஏற்றுக்கொள்ள

மாட்டேன் என்று கூறுவது அதைவிட உயர்ந்தது. நீர் வேட்கை அதாவது

தாகம்எடுத்தால் தெளிந்த நீர் பரப்பையுடைய கடல் நீரைக் குடிக்க

முடியாது. பசுக்களும் மற்ற விலங்குகளும் உண்ணுவதால் சேறுடன்

கலங்கிய நீர் சிறிதளவே இருந்தாலும் அதைத் தேடிப் பல வழிகளில்

பலரும் செல்வர்.உன்னைப் போன்றவர்களிடத்துப் பரிசில் பெறச்

செல்பவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தாம் புறப்பட்ட

நேரத்தையும் சகுனத்தையும்பழிப்பார்களே அன்றி, உன்னைப்போல்

வரையாது கொடுக்கும் வள்லல்களைப் பழிக்க மாட்டார்கள். ஆகவே, நீ

எனக்குப் பொருள்வழங்கவில்லை என்றாலும் நான் உன்னை வெறுக்க

மாட்டேன். வானத்தில் உள்ள கரிய மேகம்

மழைப்  பொழிவதுபோல் குறையாது பரிசளிக்கும் வள்ளல் 

ஓரியே , நீ வாழ்க! 

 

திணை: பாடாண். 

ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள்,வீரம்  

 ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது 

இது எனக் கூறுதல். 


நன்றி : tvu library

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்