காலம் அறிதல் அதிகாரம் 481 kaalamarithal

 

                                       காலம் அறிதல்

குறள்:1

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

குறள் விளக்கம்:

தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை 

வெல்ல  எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

குறள்:2

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.

குறள் விளக்கம்:

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை 

நீங்காமல்  நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

குறள்:3

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

குறள் விளக்கம்:

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் 

கண்டு  ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டோ?.

குறள்:4

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

குறள் விளக்கம்:

ஏற்ற காலத்தை அறிந்து, இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுதையும் 

தானே  ஆளக்கருதினும், அதுமுடியும்.

குறள்:5

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

குறள் விளக்கம்:

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற 

காலத்தைக்  கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

குறள்:6

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
 

தாக்கற்குப் பேருந் தகைத்து.

குறள் விளக்கம்:

ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது 

ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு 

வாங்குவதைப் போன்றதாகும்.

குறள்:7

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

குறள் விளக்கம்:

அறிவுடையவர்  பகைவர் தீங்கு செய்தஅப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்

வெல்வதற்கு ஏற்ற காலத்தை நோக்கிச் சினத்தை மனத்திற்குள் அடக்கி வைத்திருப்பர்.

குறள்:8

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.

குறள் விளக்கம்:

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது 

அவருடைய தலை கீழே விழும்.

குறள்:9

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

குறள் விளக்கம்:

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு 

அப்போதே  செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

குறள்:1 0

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

குறள் விளக்கம்:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த 

போது  அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்